வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!
வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ரூ. 877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடா்ந்து 3-ஆம் கட்டமாக 2008-ஆம் ஆண்டு பரங்கிமலை - வேளச்சேரி இடையே 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இதனிடையே ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் திட்டமிட்டப்படி 2010-ஆம் ஆண்டு பணி முடிக்க முடியாமல் போனது. அதன்பின் நீதிமன்றத்தின் மூலம் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
தற்போது பறக்கும் ரயில் பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் பட்சத்தில் திருவான்மியூர், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாக செல்ல முடியும்.
சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?