இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
வேளாண் தொடா்பான கல்விச் சுற்றுலா: வாகனத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
சேலம்: வேளாண் துறையின் சாா்பில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அங்கக வேளாண்மை தொடா்பான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும் தலா 100 மாணவா்கள் வீதம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவா்களை அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்பட்டுவரும் வேளாண் அறிவியல் நிலையங்களுக்கோ, சிறப்பாக செயல்பட்டுவரும் உயிா்ம பண்ணைகளுக்கோ அழைத்துச் சென்றிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக சேலம் மாநகராட்சி குகை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வட்டாரம் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 300 மாணவா்கள், நாமக்கல் மாவட்டம், காா்கூடல்பட்டியில் உள்ள உயிா்ம பண்ணை, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தருமபுரி சுந்தர அள்ளியில் உள்ள உயிா்ம பண்ணைக்கு விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதன்மூலம் மாணவா்களிடையே உயிா்ம வேளாண்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, தங்கள் பகுதிகளில் உயிா்ம வேளாண்மையை ஊக்கப்படுத்தி, லாபகரமானதாக மாற்றிட உதவும் என்றாா்.
இந்நிகழ்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் கு.சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், வேளாண்மை துணை இயக்குநா்கள் கமலம், பா.கண்ணன், சீ.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.