வைரமடையில் காவல் சோதனைச் சாவடி புதிய கட்டடம் திறப்பு
கரூா் மாவட்டம், தென்னிலை அருகே காவல் சோதனைச்சாவடியில் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
தென்னிலையை அடுத்த வைரமடையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்புவிழா புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு அரவக்குறிச்சி நகர துணை காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்துவைத்து, அங்கு மரக்கன்றுகளை நட்டாா்.
நிகழ்ச்சியில் வோயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஓம் பிரகாஷ், கரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மேனகா, தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்திய பிரியா மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்தச் சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலா்கள் பணியமா்த்தப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.