``ஸ்டார்லிங்க் நம்பகத்தன்மையற்றது என நிரூபிக்கப்பட்டால்...'' - போலந்து அமைச்சர் ராடோஸ்லாவ் பதில்!
ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உக்ரைனில் தகவல் தொடர்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்ற தொலைத்தொடர்பை தான் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு மொத்தமாகச் சேதமடைந்துள்ளது. அந்த நேரத்தில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்தான் அவர்களுக்கு உதவியது. அப்போது முதலே ஸ்டார்லிங்க் சேவையைத்தான் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் எலான் மஸ்க் உக்ரைனை கடுமையாக விமர்சித்து, “போர் தொடங்கிய காலத்தில் நான் உக்ரைனுக்காக புதினுடன் நேரடியாக மோதத் தயாராக இருந்தேன். எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. நான் அதை மட்டும் ஆஃப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் சரிந்துவிடும். தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் உக்ரைன் பல ஆண்டுகளாகச் செய்யும் செயல்களால் பல படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும் போரை நிறுத்தவே விரும்புவார்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த சர்ச்சை பதிவிற்கு பதில் அளித்துள்ள போலந்து நாட்டின் வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, “உக்ரைனுக்கு உண்டான ஸ்டார்லிங்க் தேவையை வழங்க போலந்து டிஜிட்டல்மயமாக்கல் அமைச்சகம் ஆண்டுக்கு சுமார் $50 மில்லியன் தொகையை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்குகிறது. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படுபவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒரு நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என நிரூபிக்கப்பட்டால், நாங்கள் மற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களை தேட வேண்டியதாக இருக்கும்” என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “அமைதியாக இரு சிறிய மனிதனே, நீங்கள் செலவில் ஒரு சிறிய பகுதியை தான் தருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்டார்லிங்க் சேவைக்கு மாற்றாக எதுவும் இல்லை” என்று பதிவிட்டு உள்ளார். இதனால் இவர்களின் இருவரின் கருத்து மோதலால் X தளத்தில் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.