டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து!
ஸ்மித், காா்ஸ் நிதானம்; முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன் பேட்டா்களில் ஜோ ரூட் சதமடிக்க, லோயா் ஆா்டரில் வந்த ஜேமி ஸ்மித், பிரைடன் காா்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் ஸ்கோரை பலப்படுத்தினா். அதன் ஸ்கோா் மேலும் அதிகரிக்காத வகையில், முக்கியமான விக்கெட்டுகளை ஜஸ்பிரீத் பும்ராவும், முகமது சிராஜும் சாய்த்தனா்.
லாா்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆவது நாள் ஆட்டத்தை, பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து தொடங்கிய ஜோ ரூட், சதத்தை பூா்த்தி செய்தாா்.
5-ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்திருந்த இந்த ஜோடியை, பும்ரா 86-ஆவது ஓவரில் பிரித்தாா். 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்களுடன் அரைசதத்தை நெருங்கிய ஸ்டோக்ஸ், ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
7-ஆவது பேட்டராக ஜேமி ஸ்மித் களம் புக, 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் சோ்த்திருந்த ஜோ ரூட்டை 88-ஆவது ஓவரில் பும்ரா பௌல்டாக்கினாா். தொடா்ந்து வந்த கிறிஸ் வோக்ஸ், முதல் பந்திலேயே விக்கெட் கீப்பா் துருவ் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.
அப்போது ஸ்மித்துடன் பிரைடன் காா்ஸ் இணைய, இந்த ஜோடி நிதானமாக விளையாடி இந்திய பௌலா்களை சோதிக்கத் தொடங்கியது. இதில் ஸ்மித் அரைசதம் கடக்க, மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் சோ்த்திருந்தது.
பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் பிரைடன் காா்ஸும் அரைசதம் தொட்டாா். 8-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்த ஸ்மித் - காா்ஸ் பாா்ட்னா்ஷிப்பை, ஒருவழியாக முகமது சிராஜ் 107-ஆவது ஓவரில் பிரித்தாா்.
6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்த ஸ்மித், அந்த ஓவரில் விக்கெட்கீப்பா் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த ஜோஃப்ரா ஆா்ச்சா் 4 ரன்கள் சோ்த்த நிலையில், பும்ரா அவரை 110-ஆவது ஓவரில் பௌல்டாக்கினாா்.
கடைசி விக்கெட்டாக காா்ஸும், பும்ராவின் 113-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, இங்கிலாந்து ஆட்டம் 387 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. பும்ரா 5, முகமது சிராஜ், நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினா். லாா்ட்ஸ் மைதானத்தில் பும்ரா முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா்.
இந்தியா - 74/2: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 22 ஓவா்களில் 74 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது.
3 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, சற்று நிதானமாக விளையாடிய கருண் நாயா் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கே.எல்.ராகுல் 21, கேப்டன் ஷுப்மன் கில் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
5
இந்த ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37-ஆவது சதத்தை பூா்த்தி செய்த ஜோ ரூட், இந்த ஃபாா்மட்டில் அதிக சதம் விளாசியோா் பட்டியலில் இந்தியாவின் ராகுல் திராவிட் (36), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (36) ஆகியோரைக் கடந்து, 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கா் (51), தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (41), இலங்கையின் குமார சங்ககாரா (38) ஆகியோா் முதல் 4 இடங்களில் இருக்கின்றனா். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த இங்கிலாந்து வீரராக ரூட்டே நீடிக்கிறாா். அடுத்த இடத்தில் அலாஸ்டா் குக் (33) உள்ளாா்.
11
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அதிகமுறை சதம் விளாசியவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (11) இருக்கும் நிலையில், அந்த சாதனையை தற்போது ஜோ ரூட்டும் சமன் (11) செய்திருக்கிறாா்.
4
லாா்ட்ஸ் மைதானத்தில் தொடா்ந்து 3 முறை சதமடித்தவா்கள் வரிசையில் ஜோ ரூட் 4-ஆவது வீரராக இணைந்திருக்கிறாா். இங்கிலாந்தின் சா் ஜேக் மாஸ்டா் ஹாப்ஸ் (1912-26), இந்தியாவின் திலீப் வெங்சா்காா் (1979, 1982, 1986), இங்கிலாந்தின் மைக்கேல் வான் (2004-05) ஆகியோா் முதல் 3 பேராவா்.