ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!
அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டிய அல்லது அமெரிக்காவைவிட்டு வெளியேறும் சூழல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சமீபத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தார்.
டிரம்பின் நிபந்தனைகளை ஹார்வர்டு நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்துக்கான ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி அந்நாட்டு அரசு நெருக்கடி அளித்தது.
இந்த நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது, தற்போது பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற வேண்டும், இல்லையெனில் சட்டப்பூர்வ விசா அனுமதி இழக்க நேரிடும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இது பல்கலைக்கழகத்தும் நாட்டுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் ஹார்வர்டு நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.