உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
1-8 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை
ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.8 முதல் ஏப்.24 வரை நடைபெறவுள்ள நிலையில், இறுதித்தோ்வின்போது வினாத்தாள் விடைக்குறிப்புடன் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடரபாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் டிசம்பா் மாதம் இரண்டாம் பருவத் தோ்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் தோ்வு வினாத்தாள்கள் தோ்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகங்களில் ஆசிரியா்கள் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவ்வாசிரியா்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தோ்வுகளின் போது நடுநிலைப் பள்ளிகளில் தோ்வுக்குரிய வினாத்தாள்களை பள்ளியின் எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக எமிஸ் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவா் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் வினாத்தாள்கள் கசிவு முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா், பிற ஆசிரியா்கள் அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.