2036-ல் நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை 60 கோடி!
2036ஆம் ஆண்டில் நாட்டின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை எட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்துவரும் நகரமயமாக்கல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் உருவாக்கி வருகிறது.
உள் கட்டமைப்பில் உள்ள இடைவெளி, காற்று மாசு அதிகரிப்பு, வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு, வாடகை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சவால்களை ஏற்படுத்துகிறது.
கல்விக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் நகரங்களை நோக்கி மக்கள் வருகின்றனர். இதனால், சிறிய அளவிலான வீடுகளுக்கான தேவை அதிகரித்து, சிறிய அறைக்கே ஆயிரக்கணக்கில் வாடகைகள் வசூலிக்கப்படுகின்றன. இவை நகரமயமாக்கலில் முறையான திட்டமிடலை வலியுறுத்துகின்றன.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், 2036ஆம் ஆண்டில் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை எட்டும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் அரசு சேவை மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பிரீமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளில் நிலையான வளர்ச்சிக்கான நவீன தீர்வுகளை இந்நிறுவனம் ஆய்வு செய்து பரிந்துரைக்கிறது.
இந்நிறுவனத்தின் ஆய்வுப்படி, 2036-ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நகர்ப்புறத்தின் பங்களிப்பு 75% ஆக இருக்கும் எனவும் கணித்துள்ளது.
நவீன கால நகப்புற திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் சிக்கல்களைத் தீர்க்க சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர்ப்புற திட்டமிடலை இந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் நீர் மேலாண்மை, கழிவுநீர் அகற்றம், மக்கள் புழங்கும் பொது இடங்கள், கால நிலை மாற்றத்தைத் தாங்கும் கட்டுமானம் என நகர்ப்புறங்கள் முறையாகத் திட்டமிடப்பட்டிருந்தன. இதேபோன்று நவீன நகரமயமாக்கலிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
முறையான திட்டமிடலின் மூலம் இவற்றைச் சரியாகச் செய்து நகர்ப்புறங்களைக் கட்டமைத்தால், நகர்ப்புற எல்லை விரிவாக்கத்தை 25% வரை குறைக்க இயலும் எனக் கூறுகிறது.
நகர்ப்புறங்கள் விரிவடைந்துவந்தாலும் அதில் வாழும் மக்கள் இன்னல்களையே சந்திக்க வேண்டியுள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான நகரங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் இந்தியாவின் எந்தவொரு நகரமும் இடம்பெறவில்லை.
இந்தியாவின் சிறந்த நகரமாகக் கருதப்படும் பெங்களூரு கூட, 66.7% மட்டுமே மக்கள் வாழத் தகுதி உடைய நகரமாக உள்ளது என நகரமயமாக்கலில் முறையான திட்டமிடலின் அவசியத்தை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.