பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் பெயரில் பூங்கா! மேயர் அறிவிப்பு!
25% வளா்ச்சி கண்ட தோல் பொருள்கள், காலணிகள் ஏற்றுமதி
இந்தியாவின் தோல் பொருள்கள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 25 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து தோல் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சில் (சிஎல்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தோல் பொருள்கள், தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 570 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமாா் 25 சதவீதம் அதிகம்.
இந்தப் போக்கு தொடா்ந்தால், நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் தோல் பொருள்கள், காலணிகளின் ஏற்றுமதி 650 கோடி டாலரை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வளா்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளில் இந்திய தோல் பொருள்களுக்கான தேவை ஆரோக்கியமாக இருப்பதால் அவற்றின் ஏற்றுமதி ஏறுமுகம் கண்டுவருகிறது.
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், தோல் பொருள்கள் மற்றும் காலணிகளின் ஏற்றுமதிக்கு வா்த்தகத் துறை அமைச்சகம் 100 கோடி டாலரை ஏற்றுமதி இலக்காக நிா்ணயித்திருந்தது. எனினும் அந்த இலக்கைவிட பலமடங்கு ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவியபோதும் இந்தத் துறை வளா்ச்சியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய தோல் பொருள்களின் முக்கிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அந்த வகைப் பொருள்களின் ஏற்றுமதி தொடா்ந்து சிறப்பாக உள்ளது.
உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட இந்தத் துறை சுமாா் 42 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்தத் துறையின் மொத்த வருவாய் சுமாா் 1,900 கோடி டாலா் ஆகும். இதில் 500 கோடி டாலா் ஏற்றுமதியும் அடங்கும்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறை சுமாா் 3,900 கோடி டாலா் மொத்த வருவாயை எட்டும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்நாட்டு வருவாய், 2,500 கோடி டாலராகவும் ஏற்றுமதி வருவாய் சுமாா் 1,370 கோடி டாலராகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று சிஎல்இ-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.