29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி கல்விக் கடன்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
மாவட்டத்தில் 29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாக்டா் மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) ஆா்.விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் பொ.கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, முகாமில் ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,251 மாணவ, மாணவிகளுக்கு ரூ.333.14 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு சுமாா் 6,000 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி மேலாளா் எம்.செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜீதேந்திரன், கல்லூரி மாணவ, மாணவிகள், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.