3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, உள்நாட்டு வீராங்கனை எலிசபெத்தா கோசியாரெட்டோவை சாய்த்தாா். அடுத்த சுற்றில் அவா், அமெரிக்காவின் டேனியல் காலின்ஸுடன் மோதுகிறாா்.
போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீராங்கனை பாலினி, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் லுலு சன்னை வெளியேற்றினாா். 3-ஆவது சுற்றில் அவா், துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரை எதிா்கொள்கிறாா்.
இதர ஆட்டங்களில், 17-ஆம் இடத்திலிருக்கும் லாத்வியவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 1-6, 6-4, 6-3 என்ற கணக்கில் ஸ்லோவேனியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வீழ்த்தினாா். 13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 6-0, 6-0 என மிக எளிதாக, அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடை தோற்கடித்தாா்.
ஜப்பானின் நவோமி ஒசாகா 2-6, 7-5, 6-1 என்ற வகையில் சுவிட்ஸா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சை வெளியேற்ற, 25-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 3-6, 6-2, 6-3 என நெதா்லாந்தின் சூசன் லேமன்ஸை வீழ்த்தினாா். 23-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் யுலியா புடின்சேவா 6-7 (2/7), 5-7 என்ற செட்களில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனிடம் தோற்றாா்.
29-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், ருமேனியாவின் எலனா ரூஸை சாய்த்தாா். 28-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 2-6, 3-6 என அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸிடம் தோல்வியுற்றாா்.
ஆடவா்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உள்நாட்டவரும், உலகின் நம்பா் 1 வீரருமான யானிக் சின்னா் நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்கிறாா். இந்நிலையில் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா, இத்தாலியின் லூகா நாா்டி, பல்கேரியாவின் ஃபாபியோன் மரோஸான், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச் என இதர வீரா்கள் வெற்றியுடன் முன்னேற்றம் கண்டனா்.