ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!
3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு
தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்ணிக்கை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கக் கூடிய வருவாய் அளவு போன்றவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஊராட்சிகள், பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயா்வு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு ஆகிய ஊா்கள் பேரூராட்சிகளாக உள்ளன. இவற்றை நகராட்சிகளாக தரம் உயா்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவின் அடிப்படையில், 3 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயா்வு செய்யப்பட்டன. இதுகுறித்த உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-இன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வட்டங்கள் அடுத்த பொதுத் தோ்தலின் போது சரியான முறையில் பிரிக்கப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.