3 நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை! - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது!
தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று இரவு இளைஞர் ஒருவருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு, நின்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் சிறுமி ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் சிறுமியிடமும், அந்த இளைஞரிடமும் விசாரித்துள்ளனர். இதில் அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து உடனே, ரோந்து போலீஸார் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியையும், அந்த இளைஞரையும் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து மேலும் விசாரணை செய்ததில் அந்த சிறுமி சென்னையில், மாயமானவர் என்பது தெரியவந்ததுடன் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம், சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(24) கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த இந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரன், சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்த போது, தஞ்சாவூருக்கு வர சொல்லியுள்ளார். காதலன் அழைத்த நம்பிக்கையில் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 13ம் தேதி, சிறுமி தஞ்சாவூருக்கு வந்து ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை கட் செய்து விட்டார்.

நேரம் போனதே தவிர ஜெகதீஸ்வரன் மீண்டும் காதலியான சிறுமியை தொடர்பு கொள்ளவில்லை. சிறுமி போன் செய்தும் எடுக்கவில்லை. புது ஊரு நம்பி வந்த காதலன் இப்படி செய்திட்டாரே என அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழுது கொண்டு நின்றுள்ளார். அங்கு நின்ற, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் புவனேஸ்வரன் (30) சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமியும் புவனேஸ்வரனிடம், நடந்ததை கூறி அழுதுள்ளார்.
எதுக்கும் கவலை படாதே, உன்னை காதலனுடன் சேர்ந்து வைப்பது என் பொறுப்பு என்று நம்பிக்கையாக பேசி நம்ப வைத்திருக்கிறார். அதன் பின்னர், புவனேஸ்வரன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அவருடைய மனைவி வீட்டில் இல்லாததால், திட்டம் போட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வதை செய்திருக்கிறார். பிறகு, சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போது, போலீஸில் சிக்கி விட்டார்.
இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும், சிறுமியை காதலித்து வர வைத்து ஏமாற்றிய ஜெகதீஸ்வரனையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து வர வைத்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.