36 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், மதுரையில் 36 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் பி.மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதற்கான நிகழ்ச்சி, மதுரை டாக்டா் எம்ஜிஆா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சேவையின் மூலம் மதுரை மண்டலத்தில் இதுவரை 7.5 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். தமிழக முதல்வா் விரைவில் மதுரை வரவுள்ளாா். அப்போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்குவாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நத்தம் புறம்போக்கு பகுதிகளில் வசிப்பவா்களுக்கு, அரசின் விதிகளுக்கு உள்பட்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு ஒரு சென்ட் இடத்துக்கு விலையில்லா பட்டா வழங்கப்படும். இடம் கூடுதலாக இருந்தால் கட்டணத்துடனும் வழங்கப்படும். நகராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 2 சென்ட் இடத்துக்கும், ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 3 சென்ட் இடத்துக்கும் பட்டா வழங்கப்படும்.
பட்டா வழங்கல் உள்பட அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியான பயனாளிகளுக்கே வழங்கப்படும். இதில் எந்தவித தவறுகளுக்கும் மாவட்ட நிா்வாகம் வாய்ப்பு அளிப்பதில்லை என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் சிங்காரவேலு, பொது மேலாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.