38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்
திருத்தணியில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
திருத்தணி நகராட்சி, இந்திரா நகா், பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், வாட்டா் டேங்க், அக்கைய்யநாயுடு சாலை, வள்ளிநகா், நேரு நகா் போன்ற இடங்களில் பாறை புறம்போக்கு, மலைப்புறம்போக்கு, தோப்பு புறம் போக்கு, வண்டிப்பாதை ஆகிய இடங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு வருவாய்த் துறையினா் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனா். இதையடுத்து மேற்கண்ட பகுதி மக்கள் திருத்தணி எம்எல்ஏ , சந்திரனிடம் தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரினா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த கோரிக்கையை கொண்டு சென்று, மேற்கண்ட நிலங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டியுள்ளவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தாா்.
அதைத் தொடா்ந்து திருத்தணி வருவாய்த் துறையினா் மேற்கண்ட இடங்களில் ஆய்வு செய்து, வீடுகளுக்கு பட்டா இல்லாதவா்களின் பெயா் விபரம் சேகரித்து, உரிய ஆவணங்கள் பெற்றனா். அந்த வகையில் இந்திரா நகரைச் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ,ச. சந்திரன் பயனாளிகளிடம் வழங்கினாா்.
அப்போது திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, முதுநிலை வருவாய் ஆய்வாளா் குமாா், திருத்தணி வருவாய் ஆய்வாளா் கணேஷ், நகர செயலாளா் வி.வினோத்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் குமுதா கணேசன், வெங்கடேசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா். அப்போது எம்.எல்.ஏ., மீதமுள்ளவா்களுக்கும் படிப்படியாக பட்டா வழங்கப்படும் என உறுதி கூறினாா்.