முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
3BHK விமர்சனம்: மிடில்கிளாஸ் போராட்டத்தின் வலி; டிராவிட் ஃபேனும், தோனி ஃபேனும் வென்றார்களா?
சென்னையில் ஒரு லோடு கம்பெனியில் கணக்கராகப் பணிபுரியும் வாசுதேவன் (சரத்குமார்), தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
மொத்த குடும்பமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்து ஓடுகிறது. அதற்கான சேமிப்புத் திட்டங்களும் போடப்படுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் இத்யாதி பிரச்னைகள் அவர்களின் சேமிப்பைக் காலி செய்கின்றன.
இதற்கு மத்தியில் இவர்கள் கனவு ஜெயித்ததா என்பதை உணர்வுபூர்வமான பயணமாகத் தந்திருக்கிறது ‘3BHK’.
நடுத்தர வர்க்கத் தந்தையின் பொறுப்புணர்வு, விடாமுயற்சி, சமூக மரியாதைக்காக ஏங்கும் கண்கள் எனப் பல ஆண்டுகள் சேமித்த கண்ணீர் தன்னிடம் தேங்கி நின்றாலும், அதில் ஒரு சிறு துளியைக் கூட கண்ணில் காட்டாமல் தன் உடல் மொழியாலேயே நம் கண்களைக் குளமாக்குகிறார் சரத்குமார்.
குறிப்பாக, ‘என்னை மாதிரி ஆயிராதப்பா’ என்று அவர் உடைந்து அழும் இடத்தில், படத்திற்கான உணர்ச்சிகரமான அஸ்திவாரம் ஆழமாகப் போடப்படுகிறது. வீட்டு மூத்தவர்களின் தியாகங்களுக்கு உருவமாக மாறியிருக்கிறார் சுப்ரீம் ஸ்டார்!
‘ஜெயிச்சிருவேன் பா’, ‘அப்பா சாரிப்பா’ இந்த இரண்டு வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல, தன் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கையில் ஓடும் பல இளைஞனின் வலி என்பதை ‘ctrl c, ctrl v’ எடுத்து அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் சித்தார்த்.
ஒவ்வொரு பருவத்துக்கும் அவர் காட்டியிருக்கும் உடல் மொழி வித்தியாசங்கள் புருவம் உயர்த்த வைக்கின்றன. அதிலும் புன்னகையுடன் அழும் இடமெல்லாம் அட்டகாசமான நடிப்பு!
தந்தை மகன்களுக்கு டிராவிட், தோனி ரெஃபரென்ஸ் என்றால், மீதா ரகுநாத்தின் நடிப்புக்கு ஸ்மிருதி மந்தனாவைதான் ரெஃபரென்ஸ் சொல்ல வேண்டும்.
வாடகை வீட்டின் சுவர்களில் அடிக்கவே கூடாது என்று சொல்லப்படும் ஆணிகளை எல்லாம் அவர்மேல் அடிக்கப்பட்டாலும், சிரிப்போடு தாங்கிக்கொள்ளும் பாத்திரத்தில் அவர் நடிப்பால் அடித்திருப்பது சதமே!
முதல் பாதியில் சிறிது நேரம் வந்து காணாமல் போனாலும், இரண்டாம் பாதியில் படத்தின் முக்கியமான சுவராக விளங்குகிறார் சைத்ரா ஜே. ஆச்சார். அந்த ஐஸ் கிரீம் மணி அடிக்கும் காட்சியில் சித்தார்த்துக்கும் இவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி உருக வைக்கிறது.
சாந்தியாக தேவயானி கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். குட்டி கேமியோவில் யோகிபாபுவும் கலகல! ஒட்டுமொத்தமாக அனைவரின் நடிப்பும் தரமான பில்லராக இந்த 3BHK இல்லத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது.
வாடகை வீடுகளின் குறுகிய சுவர்கள் முதல், கனவு வீட்டின் விசாலமான கற்பனைகள் வரை ஊடுருவி இருக்கின்றன தினேஷ் கிருஷ்ணன் - ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் கூட்டணியின் ஒளிப்பதிவு.
வெவ்வேறு காலகட்டங்களுக்குப் பொருந்தும் ஒளி உணர்வைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார்கள். இவர்களின் நேர்த்தியான ஃப்ரேம்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் வேலி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா.
20 ஆண்டு பயணம், அதைக் குறுகிய காலகட்டத்தில் சொல்ல வேண்டும், உணர்ச்சிகளில் சிதறுதலும் இருக்கக் கூடாது என்ற சவாலைத் திறம்பட சாதித்திருக்கிறார்.
கதைக்குத் தேவையான மாண்டேஜ்களைத் தொல்லை செய்யாத பாடல்கள், உணர்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படிக்கட்டாகப் பின்னணி இசை என இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார்.
‘சரவணா’ படத்தின் போஸ்டர், பொதுத் தேர்வின் வினாத் தாள்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் கேள்வி, பாதி கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளின் ஒழுங்கற்ற தன்மை என வினோத் ராஜ்குமாரின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.
வீடு என்பது செங்கற்களும், சிமெண்டும் மட்டுமல்ல, அதில் வாழும் மனிதர்களின் பந்தமும், அன்பும்தான் என்பதை ஒரு மிடில் கிளாஸ் கனவோடு கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
இரண்டு தசாப்த பயணமாக குடும்பத்தின் தியாகங்கள், உறவுகளின் வலிமை, மனித மனங்களின் உறுதி ஆகியவற்றை வைத்து ‘இது வெறும் வீடு வாங்கும் கதையல்ல’ என்ற யதார்த்தத்தைப் பேசியிருக்கிறது திரைமொழி.
கல்விக் கட்டணம், மருத்துவச் செலவு, திருமணம் போன்ற சூழல்கள் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் கதையையும் பிரதிபலிப்பதால், ஒவ்வொருவரும் தங்களை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடிகிறது.
‘நீங்க டிராவிட் ஃபேன், நான் தோனி ஃபேன்’ என்ற குட்டி வசனத்தில் பெரிய அர்த்தத்தையும், ‘அடிச்சாதான் வன்முறையா’ என்று பெண்களுக்கு எதிராக நடக்கும் குடும்ப வன்முறையைச் சாடிய இடத்திலும் வசனங்கள் கவர்கின்றன.
பெரும்பாலும் ஆண் மையப் பார்வையில் கதை சென்றாலும், ஆர்த்தி உடைக்கும் கண்ணாடி பாட்டில் அந்த எண்ணத்தையும் சேர்த்தே உடைக்கிறது. படம் முழுக்க யதார்த்தமாக நகரும் காட்சிகள், இறுதியில் மீண்டும் படித்து ‘மெக்கானிக்கல் இன்ஜினியர்’ ஆகிறார் என்ற காட்சி ‘ஆசை நிறைவேற்ற’மாக இருந்தாலும் லாஜிக் மீறலே!
அதேபோல, சொந்த வீடே மரியாதை என்ற போதனையையும் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் தேர்ந்த நடிப்பு, தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த ஆக்கம், யதார்த்தமான திரைக்கதை என நம்மைச் சிறப்பாக வரவேற்கும் இந்த ‘வாசுதேவன் & ஃபேமிலி’யின் இல்லத்திற்கு நிச்சயம் திரை விருந்துக்குச் செல்லலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...