3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
மும்பை: இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் எதிர்மறையாகத் தொடங்கி நிஃப்டி 156.10 புள்ளிகளும், சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன. ஜூன் 13 க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி 24,700 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது.
கோடக் மஹிந்திரா வங்கியில் ஏற்பட்ட கடும் விற்பனை மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக, இன்றைய பங்குச் சந்தைகள் மூன்றாவது நாளாக சரிந்தன.
முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்த நிலையில், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.3 சதவிகிதம் சரிந்து நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 686.65 புள்ளிகள் சரிந்து 80,776.44 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து 80,891.02 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 156.10 புள்ளிகள் சரிந்து 24,680.90 ஆக நிலைபெற்றது.
ஜூன் காலாண்டில் கோடக் மஹிந்திரா நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,472 கோடியாக இருந்ததாகவும், பாதகமான பொருளாதார நிலைமைகள் காரணமாக சில்லறை வணிக வாகன பிரிவில் அழுத்தம் ஏற்படுத்தியதாக தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் 7.31 சதவிகிதம் சரிந்தன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கியின் லாபம் ரூ.7,448 கோடியாக இருந்தது, ஆனால் பொது காப்பீட்டுப் பிரிவில் அதன் பங்கு விற்பனையில் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான லாபம் ஈட்டப்பட்டது. அதே வேளையில் மார்ச் காலாண்டில் நிகர லாபம் ரூ.4,933 கோடியாக இருந்தது.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்யுஎல், எஸ்பிஐ லைஃப் ஆகியவை உயர்ந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
பார்மா தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்த நிலையில், ரியாலிட்டி குறியீடு 4 சதவிகிதமும், மீடியா குறியீடு கிட்டத்தட்ட 3 சதவிகிதமும், மூலதன பொருட்கள், உலோகம், தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி குறியீடுகள் ஆகியவை 1 முதல் 1.5 சதவிகிதம் வரை சரிந்தன.
ஆம்பர் எண்டர்பிரைசஸ் இஸ்ரேலின் யூனிட்ரானிக்ஸ் நிறுவனத்தை ரூ.404 கோடிக்கு வாங்கியதால் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்த நிலையில், காலாண்டு லாபம் குறைந்ததால் சிடிஎஸ்எல் பங்குகள் 6% சரிந்தன.
வலுவான காலாண்டு முடிவுகளால் லாரஸ் லேப்ஸ் பங்குகள் 6% உயர்ந்தும், காலாண்டு வருவாய் குறைந்ததால் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 7% சரிந்தன.
வலுவான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஆதார் ஹவுசிங் பங்குகள் சாதனை உச்சத்தை எட்டியது.
டிசிஎஸ் அதன் பணியாளர்களில் 2 சதவிகிதத்தை குறைக்க போவதாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்தது.
லாரஸ் லேப்ஸ், ஆதார் ஹவுசிங், குளோபல் ஹெல்த், நுவோகோ விஸ்டாஸ், யுபிஎல், டோரண்ட் பார்மா, ஃபோர்டிஸ் ஹெல்த், ஷியாம் மெட்டாலிக்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் எட்டியது.