3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுத்த ஐகோர்ட்; ரத்து செய்த உச்ச நீதிமன்றம் | முழு அலசல்
தமிழக மாநிலக் கொள்கைப்படி, இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், அரசு ஆசிரியை ஒருவரது மூன்றாவது குழந்தையின் பிறப்புக்கு மகப்பேறு விடுப்பு மறுத்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. இது குறித்து வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களிடம் பேசினோம்...

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் சட்டத்துக்குட்பட்ட சரியான முடிவு. மூன்றாவது குழந்தை பெற்றால், மகப்பேறு விடுமுறை இல்லை என்பதெல்லாம் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறானது. ஏனென்றால், நம் அரசியலமைப்பு சட்டம் வாழ்வுரிமை மற்றும் சம உரிமை அனைவருக்கும் சமமாக உண்டு என கூறுகிறது. பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தைக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
சீனா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் 'ஒரு குழந்தை கொள்கை' மற்றும் 'இரு குழந்தை கொள்கை' நடைமுறையில் இருந்தது. ஆனால், இத்தகைய கொள்கைகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால், அதிக பாதிப்பை சந்திப்பது பெண்களாகவே இருப்பார்கள். நம் நாட்டில் ஒரு குழந்தை அல்லது இரு குழந்தை கொள்கையை நடைமுறை செய்தால், பலர் பெண் குழந்தைகளை விலக்கிவிட்டு ஆண் குழந்தைகளை மட்டும்தான் தேர்வு செய்வர். ஏனென்றால், ஆண்கள் குடும்பத்துக்கு வாரிசு; ஆண்கள்தான் பெற்றோருக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் நம் மரபில் ஊறியுள்ளது.
பெண்கள் திருமணத்துக்கு பின் இன்னொரு குடும்பத்துக்கு செல்வாள் என்பதால், பெண்ணுக்கு வாரிசு அந்தஸ்து தர மறுக்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். குழந்தைகளின் எண்ணிக்கைத் தொடர்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அனைவரும் ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் தந்துவிட்டு பெண் குழந்தை வேண்டாம் என தீர்மானித்துவிடுவர். பின், சமூகத்தில் பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லாமல் போகும்.

இதற்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது. சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்த பிரகடனத்தின் பிரிவு 22, ’எத்தனை குழந்தைகள் வேண்டுமென்பதை தம்பதியினர்தான் தக்க கடமையுடன் முடிவு செய்ய வேண்டும்; அரசாங்கம் அல்ல’ என கூறுகிறது. அதாவது, குழந்தைகளை பெறும் தம்பதியர் தன்னால் வளர்க்க இயலும் அளவிலான குழந்தைகளை பெற வேண்டும். வறுமையைக் காரணம் காட்டி குழந்தைகளை கொடுமை செய்யக்கூடாது என்பதாகும். எனவே, குழந்தைகளின் வளர்ப்புக் குறித்த உரிமையை, கடமைகளை மனதில் வைத்து சுதந்திரமாக தம்பதியினரே தீர்மானிக்க வேண்டும் என சொல்கிறது.
நம் நாட்டை பொறுத்தவரை, 'இரு குழந்தை கொள்கை' என்பது பல ஆண்டுகளாய் பேசுபொருளாக உள்ளது. 2030-ல் சீனாவைவிட அதிக மக்கள் தொகையை இந்தியா பெற்றிடும் நிலை நிலவுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல அரசாங்கமும் இரு குழந்தை கொள்கையை அமல் செய்ய பல திட்டங்களை கொண்டு வந்தது. தற்போதைய ஆட்சியில் அமைச்சராக பதவி வகிக்கும் பிரகலாத், இரு குழந்தை கொள்கையை அமல் செய்வதாக அறிவித்த வேளையில், அதை எதிர்த்து பல எதிர்ப்புகள் எழுந்தன. பின், இரு குழந்தை கொள்கையை அமல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலே வழக்கொன்றை தொடர்ந்தார்.

இந்தியாவில் ’இரு குழந்தை கொள்கை’யை அமல் செய்யும் முன் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள், தம்பதியர் விவாகரத்து செய்யும்போது குழந்தைகள் பெரும்பாலும் தாய் அல்லது தந்தை என்ற ஒற்றைப்பெற்றோரிடம் மட்டுமே வளர்கிறது. ஏற்கனவே இரண்டு குழந்தைகளைப் பெற்ற விவகாரத்தான பெண் மறுமணம் செய்தால், அவளுக்கு பிறக்கும் மூன்றாவது குழந்தையின் உரிமை என்னவாகும் என்பதுபற்றி தீர்மானிக்க வேண்டும்.
நம் நாட்டில் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 17% உள்ளனர். அவர்களுக்குக் கருத்தடை என்பது மறுக்கப்பட்ட ஒன்று. பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமையை அவர்களது சமூகமும் மதமும் அவர்களுக்கு அளித்துள்ளது. இவற்றையெல்லாம் தீர்மானித்த பின்புதான், இரு குழந்தை கொள்கையை அமல் செய்ய இயலும் என உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. இவ்வாறு பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தில் இரு குழந்தை கொள்கை தொடர்பான பில் சுமார் 35 முறை கொண்டு வரப்பட்டு, சட்டமாக்க இயலாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுதான் வரலாறு.

2017-ல், இரண்டுக்குட்பட்ட குழந்தைகள் வைத்திருப்போருக்கு மட்டும்தான் அரசு பணி வழங்கப்படும் என அஸ்ஸாமில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்ற இயலாமல் போனது. 2021, ஜனவரி முதல், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசுப்பணியில் உரிமை இல்லை என அஸ்ஸாமில் அறிவிக்கப்பட்டது. இதை பின்பற்றி உத்திரபிரதேச மாநிலத்தில், இரு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றெடுத்த எந்த குடும்பதிற்கும் அரசு சலுகைகளையும் நிவாரணங்களையும் பெற உரிமை கிடையாது என அறிவித்தது. இது தொடர்பாக 2018-ல் பதிவாகிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே பில்லில் சுட்டிக்காட்டியதுபோல விவாகரத்தான தம்பதியர் மற்றும் முஸ்லிம் குழந்தைகளுக்கான உரிமை போன்றவற்றை சிந்தித்த பிறகுதான், பல கலாசாரம் பல மொழி பல மதம் மற்றும் பல இனம் சேர்ந்து வாழும் ஒன்றுபட்ட நம் நாட்டில் எல்லோருக்கும் பொருத்தமான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போதைக்கு இரு குழந்தை கொள்கையை நடைமுறைப்படுத்த இயலாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த இடத்திலிருந்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இவ்வழக்கை நாம் காண வேண்டும்.
இவ்வழக்கில், நீதிபதி பார்த்திபன் மிக அழகாக தீர்ப்பு தந்திருந்தார். மூன்றாம் குழந்தை பிறந்துள்ளதால் சர்வீஸ் விதிப்படி, மருத்துவ அனுகூலங்கள் கிடையாது, 6 மாத சம்பளத்துடனான மகப்பேறு விடுப்பு கிடையாது என முடிவு செய்ததால் தாய், குழந்தை இருவருக்குமான உரிமைகளை மறுத்தது போலாகும். அரசின் 'இரு குழந்தை கொள்கை' விதியானது நம் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என கூறிய பார்த்திபன், தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தார். நீதிபதி பார்த்திபனின் தீர்ப்பை எதிர்த்த நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி பார்த்திபனின் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு 'விதிப்படி மகப்பேறு விடுமுறை இல்லை' என தீர்ப்பளித்தது. இதன்பின், அந்தத் தாய் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

உண்மையில், ’மகப்பேறு விடுப்பு பெண்களுக்கான அடிப்படை உரிமை’ என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அருமையானது. எல்லா மனிதர்க்கும் வாழ்வதற்கான சம உரிமை உள்ளது என நம் அரசியல் சாசனமே சொல்கிறது. ஒரு விதியை சுட்டிக்காட்டி, குறுகிய கண்ணோட்டத்தோடு இந்த வழக்கை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க கூடாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் அத்தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மகப்பேறு உரிமையை குழந்தை மற்றும் தாய்க்கான வாழ்வுரிமையாக பார்க்க வேண்டும். குறுகிய கண்ணோட்டத்துடன் மகப்பேறு உரிமையை அணுகக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்வது தம்பதியின் தனிமனித சுதந்திரம். அந்தத் தம்பதியின் உரிமையில் பிறர் தலையிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் தெரிவித்துள்ளது’’ என்கிற சாந்தகுமாரி, தொடர்கிறார்.

’’பிரசவம் என்பது சாதாரணமானது அல்ல; பிரசவத்தின்போது ஓர் உயிரைக் கொடுக்கின்ற தாய், தன் உயிரை இழக்கும் அளவிற்கான வலியும் வேதனையையும் தாங்கி இருக்கிறாள். எனவே, மகப்பேற்றை ஆதரிக்கும் விடுமுறையை ஊதியத்துடன் தர வேண்டும். தேவையானால் விடுமுறையை நீட்டிப்பும் செய்ய வேண்டும். ஆனால், பணிநீக்கம் செய்யக்கூடாது என்றெல்லாம் பல சட்டம் இருக்கிறது" என்கிறார் அழுத்தமாக.