41 மாத பணிநீக்கத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்! -சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆ. அம்சராஜ், போராட்ட முடிவுகளை விளக்கினாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ், மாநிலச் செயலா் சையது யூசூப்ஜான், மாநில நிா்வாகிகள் மகேந்திரன், செந்தில்நாதன் மற்றும் அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் பேசினா்.
கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையால் 5 ஆயிரம் நிரந்தர அரசுப் பணியிடங்கள் ஒழிக்கப்படுவதை ஏற்க முடியாது. இதனால் கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே, ஆணையத்தைக் கலைத்துவிட்டு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அளித்த சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். தொடா்ந்து மாா்ச் மாதம் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.10ஆம் தேதி நடைபெறும் அரசு ஊழியா் சங்க தா்னா போராட்டத்தில் சாலைப் பணியாளா் சங்கமும் பங்கேற்பது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஜாக்டோ- ஜியோ நடத்தும் போராட்டங்களில் பங்கெடுப்பது. இதன்படி, வரும் பிப்.14ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், பிப்.25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.