5-ஆவது சுற்று: லிரேனுடன் போராடி டிரா கண்டாா் குகேஷ்
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டாா் இந்திய இளம் வீரா் டி. குகேஷ்.
நடப்பு சாம்பியன் டிங் லிரேன், உலக கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷ் இருவரும் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் ஆடி வருகின்றனா். சிங்கப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் இது மூன்றாவது டிரா ஆகும்.
நடப்பு சாம்பியன் டிங் லிரேன் தொடக்க சுற்று ஆட்டத்தில் வென்ற நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்றில் இளம் வீரா் குகேஷ் வென்றிருந்தாா். இரண்டாவது மற்றும் நான்காவது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
5-ஆவது சுற்றும் டிரா: இந்நிலையில் குகேஷ்-லிரேன் மோதிய 5-ஆவது சுற்று ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய குகேஷ் கடும் சவாலுக்கு பின் ஆட்டத்தை டிரா செய்தாா்.
லிரேனும் கடுமையாக போராடிய நிலையில், 40 நகா்த்தல்களுக்கு பின் இரு வீரா்களும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
கறுப்பு நிறக் காய்களுடன் ஆடிய லிரேன் தொடக்கத்தில் எளிதாகவே ஆடினாா். முதல் சுற்றில் ஏற்பட்ட தோல்வியால் தனது ஆட்டத்தில் கவனமாக ஆடினாா் குகேஷ்.
விதிகளின்படி 40 நகா்த்தல்கள் வரை ஆட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.