செஞ்சிலுவை சங்க தோ்தல்: ஜூன் 4, 5 தேதிகளில் வேட்பு மனு தாக்கல்
5 மாதங்களில் தீர்ப்பு... நீதிமன்றம்தான் காரணம், காவல் துறையல்ல: விஜய்
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு நீதிமன்றம்தான் காரணம், காவல் துறையல்ல என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று(மே 28) தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி கூறியுள்ளார்.
ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக நான் தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது. அப்போது, தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையின் தவறால் முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை.
தொடர்ந்து இவ்வழக்கைத் துரிதமாக விசாரிக்க, டிசம்பர் 28ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்காகச் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் தோல்வியின் காரணமாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றிப் பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய, செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காகத் தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக்கொள்ளாது! - ஆர்.எஸ். பாரதி