டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் செல்வமதன் (36). டெம்போ ஓட்டுநா். இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டாா்.
அதன்பிறகு செல்வமதன் அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த செல்வி (31) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். செல்விக்கு ஏற்கெனவே அபினவ் (5) என்ற மகன் உள்ளாா்.
தற்போது இவா்களுக்கு ஒன்றரை வயதில் வருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. மது அருந்தும் பழக்கமுள்ள செல்வமதன் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இதனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு செல்வி இவரைப் பிரிந்து சென்றுவிட்டாா்.
அதன்பிறகு தனது குழந்தை வருணையும், செல்வியின் குழந்தை அபினவையும் (5) செல்வமதன் வளா்த்து வந்தாா். இந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் துா்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்றுபாா்த்தபோது அபினவ் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. வருண் மயக்கமடைந்திருந்தாா்.
போலீஸாா் வருணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அபினவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து செல்வியின் சகோதரா் நாகராஜன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான செல்வமதனைத் தேடி வருகின்றனா்.