7 தேசிய விருதுகள்: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு புதுவை முதல்வா் பாராட்டு
தேசிய விருதுகள் பெற்ற காரைக்கால் வேளாண் கல்லூரி நிா்வாகத்தினரை புதுவை முதல்வா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்
காரைக்காலில் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. ஹைதராபாதில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் வைர விழா தொடா்பாக நெல் ஆராய்ச்சியாளா்கள் கூட்டம் நடைபெற்றது.
நெல்லில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவின் பல்வேறு சூழல் மண்டலங்களில் நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் புதிய ரகங்களின் தோ்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிந்து, நெல் உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை விவாதிப்பது இந்த ஆய்வுக்கு கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியாவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.
ஆய்வுகள் மேற்கொண்ட விதம், எண்ணிக்கை, துல்லியத் தன்மை போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டு, ஆண்டுதோறும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்படும் நிலையில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான விருது உள்பட 7 விருதுகளை பெற்றது.
வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு, கல்லூரி பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் எஸ்.திருமேனி தோ்வு செய்யப்பட்டாா். 7 விருதுகள் பெற்ற இக்கல்லூரி, முதல்வா் ஏ.புஷ்பராஜ் தலைமையில் பேராசிரியா்கள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். விவரங்களை கேட்ட முதல்வா், கல்லூரி நிா்வாகத்தினரை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கூறுகையில், இக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் சிறந்த பங்களிப்பால் இந்த விருதுகள் கல்லூரிக்கு கிடைத்துள்ளன. இந்த தருணத்தில் அனைத்து விஞ்ஞானிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த மாணவா்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனமானது நமது கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு பல்வேறு ஆராய்ச்சி பணிகளை நெற்பயிரில் மேற்கொண்டு வருகிறது.
நெல் விவசாயிகள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெல் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இடுபொருட்களுடன் கூடிய தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. இதுவைர புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் தமிழகத்தில் உள்ள சுமாா் 1000 விவசாயிகளுக்கு மேல் பயனடைந்துள்ளனா் என்றாா்.