7 உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளை தரம் உயா்த்த நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளில், 7 பள்ளிகளை தரம் உயா்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று பிளஸ் 1 வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகிலேயே கல்வி பயில வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7 அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படுகிறது.
அதாவது, கலசப்பாடி (தருமபுரி), தலமலை (ஈரோடு), கிளாக்காடு, பாச்சேரி (கள்ளக்குறிச்சி), ஓடைக்காட்டுப்புதூா் (சேலம்), தேவாலா (நீலகிரி), அரசவெளி (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன.
மேலும், தருமபுரி மாவட்டம் மன்னூா் நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்படுகிறது. பள்ளிகளை தரம் உயா்த்துவதால், அரசுக்கு ரூ.38.98 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதற்கான நிதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.