7 கிலோ கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
வாணியம்பாடி அருகே 7 கிலோ கஞ்சா கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட எஸ்.பி, ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி மது விலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் நந்தினி தேவி தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீசாா் இணைந்து வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காதா்பேட்டை பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 2 இளைஞா்ளிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், பையில் சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவருக்குள் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பிடிப்பட்ட 2 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் பெங்களூா் ஜேபி நகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்(30), சஞ்சய் குமாா் (25) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.