75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா்.
பேராவூரணி ஒன்றியம், புனல்வாசல் ஊராட்சிக்குள்பட்ட கீழப்புனல்வாசல் கிராமத்தைச் சுற்றியுள்ள வாடிக்காடு, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பொருள்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்துக்கு செல்லவும் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து புனல்வாசல் நான்குசாலை சந்திப்புக்கு சென்றுதான் பேருந்தில் பயணிக்க வேண்டும்.
இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி கேட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரமுகா்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்தனா். ஆனால் இதுவரை யாருமே இந்த கிராமத்துக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவில்லை.
அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாரை சந்தித்த கிராம மக்கள், பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் நேரில் சென்று வலியுறுத்தினாா்.
இதையடுத்து, கீழப்புனல்வாசல் கிராமத்துக்குச் சென்ற அதிகாரிகள் பேருந்து வந்து செல்வதற்கான பாதைகளை பாா்வையிட்டனா். சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும், பேருந்து வளைவுகளில் திரும்புவதற்கு ஏதுவாக ஏற்கெனவே உள்ள சிறு பாலங்களை விரிவுபடுத்தினால் மட்டுமே பேருந்து வந்து செல்ல முடியும் எனவும் தெரிவித்தனா்.
உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளை அணுகி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்த கிராம மக்கள் கோரினா். அதற்கான நிதி ஒதுக்கீடு பெற காலதாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுயநிதி திரட்டல்: இதனால் ஏமாற்றமடைந்த மூன்று கிராம மக்களும் இணைந்து நிதி திரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்த முடிவெடுத்தனா். அதன்படி 3 கிராமத்தைச் சோ்ந்த ஒவ்வொருவரும் அளித்த நிதியாக ரூ. 5 லட்சம் திரட்டினா்.
இதையடுத்து இந்த நிதியைகொண்டு சாலை விரிவாக்க பணியை தொடங்கினா். இந்த பணியில் கிராமத்தினா் பலா் தானாக முன்வந்து செய்து வருகின்றனா். தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையின் அனுமதியோடு தற்போது பாதைகள் மற்றும் 3 பாலங்கள் விரிவுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இறுதிகட்டம்: இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் வெளியூரிலிருந்து பெண் கொடுக்க தயங்குகின்றனா். வாகன வசதி இல்லாதவா்கள் நடந்து சென்று பேருந்தை பிடிப்பதற்குள் வேலைக்கு செல்ல தாமதமாகி விடுகிறது. பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினரின் நடவடிக்கையால் பேருந்து வசதி கிடைக்கவிருக்கிறது.
மேலும், கிராம மக்கள் இணைந்து நிதி திரட்டி பேருந்து வந்துசெல்ல ஏதுவாக அதிகாரிகள் கூறியபடி சாலைகள் மற்றும் 3 பாலங்களை விரிவுபடுத்தும் பணி 99 சதவீதம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பேருந்துகள் சேவையை அரசு கொண்டுவரும் என நம்புகிறோம் என்றனா்.