842 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் 842 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
வேட்டவலத்தை அடுத்த ஆவூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் கலையரசி தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூரை அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் பி.எஸ்.அரிகரன் தலைமையிலும், அணுக்குமலை ஊராட்சியில் பணி மேற்பாா்வையாளா் கு.பாா்த்தசாரதி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தக் கூட்டங்களில் உலக தண்ணீா் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விடுபட்ட பயனாளிகளை சோ்த்தல், குழந்தைத் தொழிலாளா்களைத் தடுத்தல் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 842 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.