9, 11-ஆம் வகுப்புகளில் மோசமான மதிப்பெண்கள்: 56 பள்ளிகளை அடையாளம் கண்டது தில்லி அரசு
தேசியத் தலைநகரில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகளில் 60 சதவீதத்திற்கும் குறைவான தோ்ச்சி மதிப்பெண்களைக் கொண்ட ஐம்பத்தாறு பள்ளிகளை தில்லி அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்தப் பள்ளிகளை 2025-26 கல்வி அமா்வில் மேம்படுத்த கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2024-25 அமா்வில் மோசமாகச் செயல்பட்ட பள்ளிகளின் கல்வி முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் இப்போது இலக்கு வழிகாட்டுதலுக்காக இயக்குநரகத்தின் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள் மற்றும் கற்றல் முடிவுகளைக் கண்காணிப்பதை உள்ளடக்கிய ஒரு படியாகும்.
கல்வி வழிகாட்டுதலின் தோ்வுக் கிளையால் பகுப்பாய்வு செய்யப்பட்டபடி, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புத் தோ்வுகளில் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்பட்ட பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டன.
வழக்கமான ஆய்வு மற்றும் தேவை அடிப்படையிலான ஆதரவு மூலம் கல்வி செயல்திறனை மேம்படுத்த இந்தப் பள்ளிகளை வழிநடத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் அதிகாரிகள் பொறுப்பாவாா்கள்.
கல்வித் துறை அதிகாரிகள், தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறையாவது சென்று, துறை வழங்கிய வடிவத்தின்படி, அதே நாளில் விரிவான ஆய்வு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என்று கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையைக் குறிப்பிட்டு, மிஷன் கணிதம் மற்றும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான செறிவூட்டல் வகுப்புகள் போன்ற கவனம் செலுத்தும் முயற்சிகளின் முக்கியத்துவத்தை துறை மீண்டும் வலியுறுத்தியது.
இந்த முயற்சிகள் கருத்தியல் தெளிவை மேம்படுத்துவதற்கும் கற்றலை மிகவும் ஈடுபாட்டுடனும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.