துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
Air India Crash: 'இது எங்க உறவினரின் உடல் இல்ல' - இங்கிலாந்தில் அதிருப்தி; இந்தியா பதில் என்ன?
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடந்தது. விபத்து நடந்த நேரத்தில் 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன. ஆரம்பம் முதலே இந்தப் பணி மிகவும் தாமதமாக நடக்கிறது என்றக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதைத் தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனை தாமதமாகுவதாக அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையில் அடையாளம் காணப்பட்ட உடல்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏர் இந்தியா விமான விபத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் 52 பிரிட்டிஷ் நாட்டின் குடிமக்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடும்பத்தார், `அடையாளம் தெரியாத உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது' எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

இது தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் அந்தக் குடும்பத்துக்குரியதுதானா என்ற சந்தேகம் சிலக் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டது. அதனால், அவர்களில் சிலர் இறுதி சடங்குகளை செய்யாமல் காத்திருந்தனர். மற்றொரு வழக்கில், இரண்டு உடல்கள் ஒரே சவப்பெட்டியில் வைத்து அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், லண்டனின் விசாரணை அதிகாரி பியோனா வில்காக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவே மீண்டும் ஒருமுறை டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டபோதுதான் இந்த விவகாரங்கள் வெளியே தெரியத் தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடந்து வருகிறது. இங்கிலாந்து பிரதமர் பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக பேசவும் வாய்ப்புள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைப் பிரநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹீலி, ``குறைந்தது 12 பேரின் உடல்கள் இப்போதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இந்தியர்களில் பலர் அவர்களின் உறவினர் உடல் எனக் கருதி தகனம் - அடக்கம் போன்ற சடங்குகளை செய்திருக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக நான் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருக்கிறேன். உறவுகளை இழந்தவர்கள் விரும்புவது அவர்களின் அன்புக்குரியவர்களின் உடலைத் திரும்பப் பெறுவதுதான்." என்றார்.
இந்த விவகாரத்தில் இந்தியா பதில் அளித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், ``சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு தெளிவாக தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உடல்கள் அனைத்தும் மரியாதையாக கையாளப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.