Albatross: 5 ஆண்டுகள் தரை இறங்காமல் பறக்கும் பறவை; 40 ஆண்டுகள் வாழும் காதல் பறவையைத் தெரியுமா?
அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல் பறவை. பசிபிக், அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் வசிக்கிறது.
டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் கொண்டிருக்கும் மோனோகேமஸ் வகையைச் சேர்ந்தது.
சில நேரம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கூட கொண்டிருக்கலாம். மொத்தமாக உலகில் 22 வகை ஆல்பட்ரோஸ்கள் உள்ளன. இவை ஒரு இனப்பெருக்க காலத்தில் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும்.
நீங்கள் கடலில் பயணம் செய்யும்போது 12 அடி இறக்கைகளை விரித்துக்கொண்டு ஒரு பறவைப் பறப்பதைப் பார்த்தால் நிச்சயமாக அதனை சூப்பர் மேன் என்றோ அல்லது விமானம் என்றோ தான் நினைக்கக்கூடும்... ஆனால் அது ஆல்பட்ரோஸ். இந்த பறவைகளைப் பற்றி சில ஆச்சரியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மிகப்பெரிய இறக்கைகள்
இப்போது உலகில் இருக்கும் பறவைகளிலேயே மிகப்பெரிய இறக்கைகளைக் கொண்டது அல்பட்ரோஸ் தான்.
இதன் இறக்கைகள் 3.7 மீட்டர் வரை விரியக்கூடியது. இவ்வளவு பெரிய இறக்கைகள் இருப்பதனால்தான் இவற்றால் நீண்டநேரம் பறக்க முடிகிறது.
நீண்ட ஆயுள்
அல்பட்ரோஸ் பறவைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழக் கூடியன.
1956 ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக்குழுவினர் ஒரு லைசன் வகை அல்பட்ரோஸ் பறவைக்கு விஸ்டம் எனப் பெயர் சூட்டினர். சுமார் 62 ஆண்டுகள் கழித்து அதே பறவையை அவர்கள் திரும்பவும் பார்த்துள்ளனர்.
காட்டு உயிரிகளில் மிக நீண்ட ஆயுளைக் கொண்டவற்றுள் ஒன்று.
பறக்கும்போதே தூங்கும் பழக்கம்
அல்பட்ரோஸ் பறவைகள் ஒருமுறை பறக்கத் தொடங்கிவிட்டால் எளிதில் நிலத்தில் கால்வைக்கவே வைக்காது. சராசரியாக ஒரு ஆண்டும், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் அவை பறந்துகொண்டே இருக்கும்.
அவற்றுக்கான உணவும் கடலிலேயே கிடைத்துவிடும். அல்பட்ரோஸ் பறவைகள் பறக்கும் போதே தூங்கும் பழக்கம் கொண்டவை என்கின்றனர். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஃப்ரிகேட்பேர்ட் என்ற பறவைகள் கூட பறந்துகொண்டே தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கணக்காக நிலத்தில் கால் வைக்காமல் இருக்கும் இந்த பறவைகள் இனப் பெருக்கக் காலம் முழுவதுமே தரையில் தான் கழிக்கும்.
இனப் பெருக்கம்
அல்பட்ரோஸ் பறவை இணையைக் கவருவதற்காக ஆடும் நடனம் மிகவும் பிரபலம். ஏற்கெனவே கூறியதைப் போல இவை ஆயுளில் ஒரே ஒரு இணையைத் தான் கொண்டிருக்கும். ஆனால் வாழ்வின் பெரும் காலத்தைத் தனியாகவேதான் கழிக்கும்.
இனப் பெருக்கக் காலம் என்பது ஓராண்டுக்கும் மேல் நிலைக்கும். அந்த நாட்களில் முழுவதுமே அல்பட்ரோஸ்கள் தரையில்தான் இருக்கும்.
முட்டையிடும் வரை ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றை ஒன்று அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் பின்னர் பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டு, மாறி மாறி அவற்றை அடைகாக்கும். ஒரு பறவை அடைகாக்கும் போது மற்றொன்று உணவு சேகரிக்கும்.
குஞ்சு பொரித்த பின்னர் இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுக்காக உணவு தேடும். குஞ்சு வளர்ந்து பறக்கும் நிலைக்கு வரும் வரை இரண்டு பறவைகளும் அங்கே சேர்ந்து இருக்கும். இதற்கு 165 நாட்கள் வரை கூட ஆகலாம்.
அதன் பிறகு இரு பறவைகளும் பிரிந்து சென்றுவிடும் அடுத்த இனப் பெருக்கக் காலம் வரை அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளாது.
கூனி (முட்டாள்) பறவைகள்
காமிக்ஸ்களில் அல்பட்ரோஸ் பறவைகள் தரையிறங்குவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தினால் அவற்றுக்கு முட்டாள் பறவைகள் என்று பெயர்.
பறப்பதில் என்னதான் கில்லாடியாக இருந்தாலும் அல்பட்ரோஸ் பறவைகள் அடிக்கடி தரையிறங்குவதில்லை என்பதால் அவற்றுக்குத் தரையிறங்கத் தெரியாது.
காற்றில் மிதந்து வந்து பொத்தெனத் தரையில் விழும். அவற்றின் வாத்து போன்ற கால்கள் தரையிறங்குவதில் வீக்!
நீருக்கடியில் இருக்கும் இரை...
அல்பட்ரோஸ் மட்டுமல்ல பெரும்பாலான கடற்பறவைகள் நீருக்கடியில் இருக்கும் உணவைத் தேடி உண்ணவே முயலும். கிட்டத்தட்ட 19 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இரையைக்கூடக் குறிவைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை அல்பட்ரோஸ் பறவைகள். இதற்காக இவை பல உத்திகளைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உயரமான பறவைகள்
அல்பட்ரோஸ் பறவைகளின் இறக்கை மட்டும் நீளமானவை அல்ல. அதன் உயரம் 3 முதல் 4 அடிவரை இருக்கும். எடையோ 7.7 கிலோ முதல் 10 கிலோ வரை இருக்கும்.
அல்பட்ரோஸ் பறவைகள் பறக்க அதிகமான சக்தி தேவைப்படுமே என இப்போதே கணித்திருப்பீர்கள். ஆனால் அப்படி இல்லை, அவை பறக்கும் போது இறக்கையை அசைப்பதே இல்லை.
எதாவது மலைப் பகுதியிலிருந்து விழுவது போலப் பாய்ந்து பறக்கத் தொடங்கும், இரண்டு மூன்றுமுறை இறக்கையை அசைத்தால் போதும், அப்படியே காற்றில் மிதக்க வேண்டியது தான்.
பறவைகளைத் தேடிப் பார்க்கும் பழக்கம் இந்த காலத்தில் அதிகரித்திருக்கிறது. அல்பட்ரோஸ்களைக் காண நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 40,000க்கும் மேலான மக்கள் குவிகின்றனர்.
அழியும் நிலையில் Albatross
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கூறுவதன் படி 22 அல்பட்ரோஸ் இனங்களில் 21 அழிவின் விளிம்பில் உள்ளன. அதிலும் 15 விரைவில் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது எனக் கருதுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் இவற்றின் இறகுகள் வேட்டையாடப்படுவதுதான். அதிகப்படியான மீன் பிடிப்பால் இவற்றுக்கான இரை கிடைப்பது கடினமாகிவிட்டது. சிறிய அல்பட்ரோஸ் பறவைகள் கடல் பிளாஸ்டிக்குகளை உட்கொள்ளும் நிலை இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...