Anurag Kashyap: "என்னுடைய மகள் திருமணத்திற்காக விஜய் சேதுபதி செய்த உதவி!" - அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப் தற்போது நடிகராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
கடந்தாண்டு இவர் 'மகாராஜா', 'ரைபிள் கிளப்' ஆகிய திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளியிருந்தார்.

இந்நிலையில், 'தி இந்து' நடத்திய 'ஹடில்' நிகழ்வில் அனுராக் காஷ்யப் பங்கேற்று சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில் விஜய் சேதுபதி தொடர்பாக அவர் பகிர்ந்த ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனுராக் காஷ்யப் கூறுகையில், "'இமைக்கா நொடிகள்' திரைப்படத்திற்குப் பிறகு நான் பல தென்னிந்திய திரைப்படங்களை நிராகரித்தேன்.
அப்போது ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
என்னுடைய 'கென்னடி' படத்தின் இறுதிக் கட்டப் பணி நேரத்தில் விஜய் சேதுபதியை அடிக்கடி சந்தித்தேன்.
அவர் என்னிடம் ஒரு அற்புதமான கதை இருப்பதாகவும், அதை என்னிடம் கொண்டு வர முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

முதலில் நான் அதை மறுத்துவிட்டேன். ஆனால், என்னுடைய 'கென்னடி' படத்திற்கு அவர் ஏதோவொரு வகையில் உதவினார்.
அதற்காக அவருக்கு நான் படத்தில் நன்றி குறிப்பிட்டிருந்தேன்," என்றவர், "நான் அவரிடம், 'அடுத்த ஆண்டு என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்.
ஆனால் அதற்கு என்னால் செலவு செய்ய முடியுமா என்று தெரியவில்லை' என்று கூறினேன்.
அதற்கு விஜய் சேதுபதி, 'நாங்கள் உங்களுக்கு உதவுவோம்' என்றார். அப்படித்தான் 'மகாராஜா' திரைப்படம் உருவானது" என்றார்.