வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
Book Fair: 'மாணவர்கள் கையில் சாதிக் கயிறு' - 1 ரூபாய்க்குச் சிறார் கதை; ஆசிரியர் சொல்லும் காரணமென்ன?
48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தினம் தினம் பல புத்தகம் சார்ந்த நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி இந்த புத்தகக் காட்சியில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த சிறார் சிறுகதை புத்தகம் தான் "கயிறு". இதன் விலை வெறும் ஒரு ரூபாய் மட்டும் தான். எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதி, சீர் வாசகர் வட்டம் வெளியிட்டு இருக்கும் இந்த புத்தகத்தை வாசகர்கள் ஆவலுடன் வாங்கி வருகின்றனர்
இந்த புத்தகம் பற்றி அதன் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களிடத்தில் பேசினோம். "கயிறு கதையைப் பஞ்சுமிட்டாய் எனும் சிறுவர்களுக்கான இதழுக்காகப் பிரபு என்பவர் முதலில் கேட்டார். நான் எழுதிக் கொடுத்த பின் இது பெரிய பசங்களுக்கான கதை போல இருக்கிறதெனவும் பத்து வயது சிறுவர் படிக்கும் வகையில் எழுதவும் எனவும் கூறியிருந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பின் இன்னும் சில மாற்றங்கள் செய்து, இந்த கதையை இ-புத்தகமாக வெளியிட்டோம். வழக்கத்தை விட நிறைய பேர் இந்த இ-புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து வாசித்ததாகத் தெரியவந்தது. இது எனக்கு மிகவும் உற்சாகமளித்தது. பள்ளிக்குப் போகும் சிறுவன் கையில் அங்குள்ள ஒருவர் சாதிக் கயிறு கட்டிவிடுகிறார். பின் வீட்டுக்கு வந்த பையனுக்கும் அவன் அம்மாவுக்கும் இடையிலான ஒரு வாரக் கால உரையாடலும், வெள்ளிக்கிழமை அந்த சிறுவன் என்ன செய்தான் என்பதும்தான் இந்த புத்தகம்.
கடந்த வருடம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர் சின்னதுரை சக மாணவர்களாலேயே வெட்டப்பட்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்வை உண்டாக்கியது. அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உள்ள தோழர் ஒருவர், "ஒருவேளை அந்த பள்ளியில் இந்த கயிறு புத்தகம் கொடுக்கப்பட்டிருந்தால் நாங்குநேரி சம்பவம் நடந்திருக்காது என நினைக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இது சொல்வதற்கு மிகையாக இருந்தாலும் ஒருத்தருக்கு இப்படித் தோன்றியிருக்கிறது இல்லையா? பின்பு கடந்த ஆண்டு, பாரதி புத்தகாலயம் (Books for Children) இதனை 5 ரூபாய் மலிவு விலை பதிப்பாக 50,000 பிரதிகளை வெளியிட்டனர். இதற்கு நான் உரிமத்தொகை எதுவும் கேட்கவில்லை.
முடிந்தளவுக்குக் குறைந்த விலையில் வெளியிடுங்கள் என்று மட்டும் கூறினேன். பின் காகிதத்தின் விலை அதிகமான பின்பு, பாரதி புத்தகாலயம் புத்தக விலையைச் சற்று ஏற்றிவிட்டனர். இந்த நேரத்தில், சீர் வாசகர் வட்டம் சார்பில் இந்த புத்தகத்தை வெளியிடக் கேட்டிருந்தனர். புத்தகத்தைத் தயார் செய்து விட்டு இதனை ஒரு ரூபாய்க்குத் தரப்போவதாக அவர் கூறியவுடன் ஆச்சரியமாக இருந்தது. சீர் வாசகர் வட்டம் 10,000 பிரதிகள் விற்கத் திட்டமிட்டுள்ளனர்.
எனக்கு விற்பனை எண்ணிக்கை பிரச்னை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் கையில் சேர வேண்டும். அந்த வகையில் ஒரு ரூபாய் முன்னெடுப்பு என்பது மகிழ்ச்சியே" இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முன்னெடுப்பை எடுத்துள்ள சீர் வாசகர் வட்டத்தின் கவிஞர் தம்பி அவர்களிடத்தில் பேசினோம், "இன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களிடையே பரவலாக வளர்ந்து வரும் சாதிக் கயிறு கட்டிக்கொள்ளும் கலாச்சாரத்துக்கு எதிராக ஒரு பிரச்சார நெடியில்லாத, சாதிய கண்ணோட்டத்தை வளர்ப்பது தவறு எனச் சொல்கிற அற்புதமான கதைதான் 'கயிறு'. நாங்குநேரி சம்பவத்துக்குப் பின் இந்த புத்தகம் அதிக கவனம் பெற்றது.
இப்போது இந்த புத்தகத்தை நிறைய பேரிடம் சென்று சேர்க்க வேண்டும் என்பதால் சீர் வாசகர் வட்டம் 10,000 படிகளை ஒரு ரூபாய்க்குப் பதிப்பித்துள்ளோம். புத்தகக் காட்சியில் இங்கு அரங்குக்கு வருகிறவர்களுக்கு ஒரு ரூபாய்க்கும், கூடுதலாகத் தேவைப்படுவோருக்கு 5 ரூபாய்க்கும் புத்தகம் வழங்கிக் கொண்டு இருக்கிறோம்" என்று கூறினார்.
ஒரு A4 காகிதமே ஒரு ரூபாய் விற்கும் சூழலில் ஒரு ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை, அதுவும் மாணவர்களுக்குத் தேவைப்படும் கருத்தை அவர்களுக்குப் புரியும் வகையில் வழங்கப்படுவது நல்ல முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...