Chhatrapati Shivaji Maharaj: மராத்திய மன்னராக ரிஷப் ஷெட்டி - ரிலீஸ் எப்போது?
காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்த ரிஷப் ஷெட்டி, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இது மராத்திய மன்னர் சிவாஜியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும். இந்த வரலாற்றுப் படத்தை சந்தீப் சிங் இயக்கவுள்ளார்.
கடந்த தீபாவளியை ஒட்டி, ரிஷப் ஷெட்டி ஏற்கெனவே வெற்றிபெற்ற ஹனுமன் படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஜெய் ஹனுமன் படத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியானது. இந்தநிலையில் அடுத்ததாக சத்ரபதி சிவாஜி மஹராஜ் போஸ்டரும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் முதல் போஸ்டரிலேயே சிவாஜியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி.
"இந்தியாவின் தலைசிறந்த போர்வீரர், பாரதத்தின் பெருமையாக திகழும் சத்ரபதி சிவாஜி மன்னரின் காவியப் பெருங்கதையை வழங்குவது அவருக்கு எங்களது மரியாதை மற்றும் தனிச்சிறப்பு. இதுவெறும் திரைப்படம் அல்ல - எல்லா முரண்களுக்கும் எதிராகப் போராடிய வீரரை, வலிமை மிக்க முகலாய பேரரசின் வலிமைக்கு சவால்விடுத்த மாமன்னரை, மறக்க முடியாத மரபை உருவாக்கியவரை கௌரவிப்பதற்கான போர் முழக்கம்." என தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
மேலும் அவர் 'நாங்கள் சொல்லப்படாத கதையை விவரிக்கப்போகிறோம்' என்றும் இது புதுவித சினிமா அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் டிராமா வைகை திரைப்படமாக உருவாகும் இது, ஜனவரி 21, 2027-ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் சிங் இதற்கு முன்னர் பிரியங்கா சோப்ராவின் மேரி கோம், அமிதாப் பச்சனின் ஜூந்த் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படத்தின் முன்கதையை இயக்கி நடிக்கிறார். தொடர்ந்து ஹனுமன், சத்ரபதி சிவாஜி படங்களில் நடிக்கவுள்ளார்.