Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க...' - இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!
Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த ஐ.பி.எல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த பௌலரான திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆட தடையும் அபராதமும் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ், மார்க்ரம், பூரன் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு 206 ரன்கள் டார்கெட். சன்ரைசர்ஸ் அணி சேஸிங்கை தொடங்கியது.
'அபராதம் மற்றும் தடை!'
அந்த அணியின் சார்பில் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடினார். 18 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்தார். ரவி பிஷ்னோயின் ஓவரில் மட்டுமே தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்தார். அதற்கடுத்த ஓவரையே திக்வேஷ் சிங் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக்கின் விக்கெட்டை திக்வேஷ் வீழ்த்தினார். அபிஷேக் 20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

அவுட் ஆகிவிட்டு அவர் வெளியேறுகையில் திக்வேஷ் அவர் பாணியிலேயே ஆக்ரோஷமாக கொண்டாடியதோடு அபிஷேக்கை நோக்கியும் சில வார்த்தைகளை பேசினார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டாகியது. இரு அணியின் வீரர்களும் நடுவர்களும் இடையே புகுந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், திக்வேஷ் ரதிக்கும் போட்டி ஊதியத்தில் 50 சதவீதமும் அபிஷேக் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திக்வேஷ் ரதி இந்த சீசனில் இதற்கு முன்பாகவே பஞ்சாப், மும்பை அணிகளுக்கு எதிராக இதே மாதிரி ஆக்ரோஷமாக செயல்பட்டு அபராதத்தை வாங்கியிருந்தார்.

இதன் மூலம் விதிகளை மீறும் வீரர்களுக்கு வழங்கப்படும் Demerit புள்ளிகளையும் பெற்றார். இதுவரை 5 Demerit புள்ளிகளை பெற்றிருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.