பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
Doctor Vikatan: உடல்நலமில்லாத குழந்தைக்கு ஊசி, மாத்திரை, சிரப் - எது சரி?
Doctor Vikatan: குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என மருத்துவரிடம் அழைத்துப் போகிறோம். சில மருத்துவர்கள் உடனே ஊசி போடுகிறார்கள். சிலர், ஊசி வேண்டாம் என மாத்திரை, சிரப் கொடுக்கிறார்கள். இந்த இரண்டில் எது சரி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பல பெற்றோரும் குழந்தைக்கு உடனே உடல்நலம் சரியாக வேண்டும் என்ற எண்ணத்தில், வரும்போதே, 'ஊசி போட்ருங்க டாக்டர்' என்று சொல்வதைக் கேட்கிறோம்.
அதேபோல ஊசி அவசியம் என்ற நிலையிலும், 'ஐயோ ஊசியா, வேணாம் டாக்டர்' என்று சொல்வோரும் இருக்கிறார்கள். எனவே, ஊசியா, மாத்திரையா என்பதை, அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர பெற்றோரோ, மற்றவர்களோ முடிவு செய்யக்கூடாது.
குழந்தைக்கு சளி பிடித்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதற்காக மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
அதில் குணமாகாத நிலையில் அதை ஊசி போட்டு குணமாக்காமல், டெஸ்ட் செய்து கண்டுபிடித்து, அதன்பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைப்பட்டால் மருத்துவர், மாத்திரைக்கு பதில் ஊசியைப் பரிந்துரைப்பார்.

தீவிர வாந்தி பிரச்னையுடன் ஒரு குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். உடனடியாக ஊசி போட்டால் அதை நிறுத்த முடியும், அதன் பிறகு அந்தக் குழந்தையால் மற்ற மருந்துகளையும் உணவுகளையும் சாப்பிட முடியும் என்ற நிலையில், ஊசி போட மாட்டேன் என சொல்வது சரியில்லை.
அதையும் தாண்டி பிரச்னை தீவிரமான நிலையில் மருத்துவரிடம் அழைத்துவரும்போது மருத்துவமனையில் அட்மிட் செய்து, பரிசோதனைகளை எல்லாம் மேற்கொண்டு, தேவைப்பட்டால் குளுக்கோஸ் ஏற்றி, குணமான பிறகுதான் வெளியே அனுப்ப முடியும்.
எனவே, மருத்துவரின் மேல் நம்பிக்கை வையுங்கள். ஊசி தேவையா, இல்லையா என்பதை அவரது முடிவுக்கே விட்டுவிடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.