சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?
Doctor Vikatan: உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன். இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
உடல் பருமன் பிரச்னைக்கு மரபணு மாறுபாடுகளும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தை பிறந்த பிறகு மரபணு மாறுபாடுகளால் பிரச்னைகள் வரலாம்.
தவிர, பரம்பரையாகத் தொடரும் நோய்களை ஆங்கிலத்தில் 'ஹெரிடட்டரி டிசீசஸ்' (Hereditary diseases ) என்று சொல்கிறோம்.
குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனுடன் இருக்கும்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அந்த ஜீன் கடத்தப்படலாம். ஆனால், உடல் பருமனுக்கு அது மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. உடல் பருமனைத் தூண்டும் காரணிகளில் இதுவும் ஒன்று.
உதாரணத்துக்கு, உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் உடல் பருமனுடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் காரணமாக உங்களுக்கும் அந்தத் தாக்கம் இருக்கும்.
உடல் எடை அதிகரிப்பது தெரிந்தும் நீங்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தாதபட்சத்தில் உங்களுடைய எடை கடகடவென அதிகரிக்கும்.

உடல் பருமனுக்கான மரபணு உங்களுக்குள் இருப்பதால் உங்களுக்கும் ரிஸ்க் அதிகரிக்கிறது. பருமனாக இருக்கும் சிலர், 'நான் என்ன பண்றது... எங்க குடும்பவாகே அப்படித்தான்... எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க' என சொல்வதைக் கேட்கலாம்.
குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதாவது அம்மா-அப்பாவுக்கு நீரிழிவு இருப்பதால் பிள்ளைகளுக்கும் அது வரலாம். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகள் மூலம் அது வராமலும் தடுக்கலாம்.
உடல்பருமனும் அப்படித்தான். குடும்பத்தில் அந்தப் பிரச்னை இருப்பது தெரிந்து, மற்றவர்கள் ஆரம்பத்திலேயே உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தாலே உடல்பருமனில் இருந்து தப்பிக்கலாம். எப்போதுமே வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.