விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
Fair Delimitation : `543 பேர் இருக்கும்போதே பேச நேரம் கிடைப்பதில்லை..!' - கார்த்தி சிதம்பரம்
மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான பங்கை செலுத்திவருகிறது. இதற்கான, தொகுதி மறுவரையரையை எதிர்க்கும் மாநில அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து முதல் கூட்டத்தை நடத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கார்த்தி சிதம்பரம்
இந்த ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கார்த்தி சிதம்பரம், ``தமிழ்நாட்டின் முதல்வர் முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் 543 உறுப்பினர்கள் தொகுதியை மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டுக்கான பிரநிதித்துவம் குறையும். 888 உறுப்பினர்கள் என அதிகப்படுத்தினால் தமிழ்நாட்டுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
`தென்னகத்தை வஞ்சிக்கும்’
அதே நேரம் வடமாநிலங்களின் பிரநிதித்துவம் இன்னும் அதிகரிக்கும். உதாரணமாக இப்போது தமிழ்நாடு - புதுச்சேரி என இரு மாநிலத்துக்கும் சேர்த்து 40 உறுப்பினர்கள் என்றால், உத்தரப்பிரதேசத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 80. அதாவது நம்மை விட ஒரு மடங்கு அதிகம். இதை அதிகப்படுத்தினால் அவர்களின் எண்ணிக்கை இருமடங்காகும்.

மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தென்னகத்தை வஞ்சிக்கும்படியான இந்த மறுசீரமைப்பை செயல்படுத்தினால் தென்னகம் கடுமையாக பாதிக்கப்படும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழ்நாடு முதல்வரின் 25 ஆண்டுகளுக்கு, மக்கள் தொகை சரிசமமாகும் வரை தற்போதைய நடைமுறையே தொடரவேண்டும் என்ற முடிவு சிறப்பானது.
543 பேர் இருக்கும் இந்த நாடாளுமன்றத்திலேயே எங்களுக்குப் பேச நேரம் கிடைப்பதில்லை. இதில் இன்னும் 300 பேரை சேர்த்தால் பேசவோ, விவாதம் செய்யவோ முடியாது. பெரிய நாடாளுமன்றம் இருப்பதாலேயே ஜனநாயகம் சரியாக இருக்கும், விவாதம் சிறப்பாக செய்யலாம் என நினைப்பது தவறு.
எந்தப் பிரச்னைக்கு யாரை அழைத்துப் பேசுவது என்ற ஒரு முறை இருக்கிறது. முல்லைப் பெரியார், மேக்கேதாட்டூ விவகாரங்களுக்கு ஆந்திரா முதல்வரையோ, பஞ்சாப் முதல்வரையோ, ஒடிசா அரசியல்வாதியையோ அழைக்க முடியாது.
இந்த தொகுதி வரையறை என்பது இந்தியாவையே பாதிக்கும் ஒரு திட்டம். குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களை பெரியளவில் பாதிக்கும். அதற்காக ஒருங்கிணைத்துதான் ஆகவேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஓரங்கட்டப்படுகிறது.
இந்துத்துவா, இந்தி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. மும்மொழிக் கொள்கை இருக்கும் மாநிலங்களில் இந்தியை தவிர்த்து வேறு எந்த மொழிகளையெல்லாம் கற்றுக்கொடுக்கிறார்கள் என மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடட்டும்.
தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் திருக்குறள், ஆத்திச்சூடி, தமிழ் இலக்கணங்களைப் படித்துவிட்டா வருகிறார்கள். அவர்கள் இங்கு வந்து தமிழைக் கற்றுக்கொள்கிறார்கள். அதுபோல எந்த மொழி தேவையோ அதை கற்றுக்கொள்ளலாம்." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
