`விசிக எம்.பி-க்கு அம்பேத்கர் விருது' - எதிர்க்கும் தமிழ்ப்புலிகள் கட்சி... சொல்...
Gautham Gambhir: ``அணியிலிருந்து நீக்கப்படுகிறாரா ரோஹித்?" - கம்பீர் சூசகம்
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்கவிருக்கிறது. 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கும் நிலையில் சிட்னி டெஸ்ட்டை இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டுக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பயிற்சியாளர் கம்பீர், நாளைய போட்டியில் ரோஹித் ரோஹித் ஆடுவாரா மாட்டாரா என்பதற்கு தெளிவான பதிலை சொல்லாமல் சென்றிருக்கிறார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், 'ஒரு தொடரை டிரா செய்யும் நிலையில் இருப்பது நல்ல நிலைமைதான் என நினைக்கிறேன். எல்லாமே எங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அணியில் இருக்கும் எல்லோருக்குமே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். வெற்றியோ தோல்வியோ ஒரு கேப்டனுக்கும் பயிற்சியாளருக்குமான உரையாடல் அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும். அது டிரெஸ்ஸிங் ரூமை விட்டு கசியக் கூடாது. அணிக்குள் விவாதிக்கப்பட்டதாக வெளியில் பரவும் விஷயங்கள் எதிலும் உண்மையில்லை. ஆனால், நாங்கள் எங்களுக்குள்ளேயே சில நேர்மையான கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிக் கொண்டோம். போட்டியை வெல்ல முதல் இன்னிங்ஸில் நாங்கள் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும். மெல்பர்னில் அதை ஓரளவுக்கு சாத்தியப்படுத்தினோம். சிட்னியிலும் அதை செய்ய முனைய வேண்டும்.' என கம்பீர் பேசியிருந்தார்.
'நாளைய போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவாரா?' என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, 'நாளை பிட்ச்சின் நிலையை பார்த்த பிறகுதான் ப்ளேயிங் லெவனை முடிவு செய்வோம்!' எனக் கூறியிருக்கிறார். ரோஹித் சர்மாதான் அணியின் கேப்டன். அவர் லெவனில் இருப்பதில் எந்த சிக்கலும் இல்லையெனில், ரோஹித்தின் இருப்பை அவர் உறுதி செய்யும் வகையில் பதில் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், கம்பீர் ரோஹித் விஷயத்தில் பொடி வைத்து பேசுகிறார். இதனால் நாளைய போட்டியில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.