Gukesh: குரோஷியா செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் குகேஷ்; மூன்றாம் இடம் பிடித்த கார்ல்சன்!
குரோஷியாவின் சாக்ரெப்பில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் (Super United Rapid and Blitz) தொடரில் நடப்பு உலக சாம்பியன் குகேஸ் ரேபிட் பிரிவில் சாம்பியன் வென்று அசத்தியிருக்கிறார்.
இந்தத் தொடரானது ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. இதில், குகேஸ் தனது முதல் சுற்றிலேயே ஜான்-க்ர்ஸிஸ்டோஃப் டுடாவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சி கண்டார்.
ஆனாலும், அடுத்தடுத்த மூன்று சுற்றுகளில் ஹாட்ரிக் வெற்றிபெற்ற குகேஸ், தனது ஐந்தாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

ஏற்கெனவே, கடந்த மே மாதம் நார்வேயில் நடந்த செஸ் தொடரில் கிளாசிக்கல் வகை போட்டியில் தன்னை வீழ்த்தியிருந்த குகேஷை இந்த சுற்றுக்கு முன்பு, "குகேஷ் இந்த வடிவ (ரேபிட்) போட்டிகளில் தன்னை இன்னும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தத் தொடரில் அவரை ஒரு பலவீனமான போட்டியாளராகத்தான் பார்ப்பேன்." என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் கார்ல்சன்.
ஆனால், அதற்கான பதிலாக இதைச் சுற்றில் அவரை வீழ்த்தி மீண்டுமொருமுறை சர்ப்ரைஸ் கொடுத்தார் குகேஷ்.
6-வது சுற்றிலும் வெற்றி பெற்ற குகேஷ், முதல் சுற்றில் அடைந்த தோல்விக்குப் பிறகு தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவுசெய்தார்.
பின்னர், 7, 8 ஆகிய சுற்றுகளில் டிரா கண்ட குகேஷ் கடைசி சுற்றில் வெற்றிபெற்றால் சாம்பியன் என்ற சவாலான நிலைக்குச் சென்றார்.
இந்த நிலையில்தான், நேற்று (ஜூலை 4) தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோவையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்தத் தொடரில், முதல் சுற்றுக்குப் பிறகு தோல்வியே காணாத குகேஷ் 6 வெற்றி, 2 டிரா என மொத்தமாக 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இதே பிரிவில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி உள்பட 7 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று நாகம் இடம் பிடித்தார்.
மேலும் மேக்னஸ் கார்ல்சன், குகேஷிடம் அடைந்த ஒரு தோல்வி உள்பட இரண்டு வெற்றி, 6 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று மோன்ராம் பிடித்தார்.
முன்னதாக, நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றதற்கும், குகேஷ் மூன்றாம் இடம்பிடித்ததற்கும் வெறும் 1.5 புள்ளிகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.