விமானத்தில் ஏன் தேங்காய் எடுத்துச் செல்ல தடை தெரியுமா? - அறிவியல் சொல்லும் காரண...
Health: ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ்.... யார், எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்'' எனக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர் உமா ராகவன், சத்துகளின் அளவு மற்றும் புழக்கத்தில் இருப்பதன் அடிப்படையில் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வகைப்படுத்தி அவற்றின் பலன்களையும், யார் யார் சாப்பிடலாம், ஒருநாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் போன்ற தகவல்களையும் கூறுகிறார்.
1. பேரீச்சை
ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம்வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம் என்பதுடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும்.
பேரீச்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம்.
2. வால்நட்
வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் (omega fatty acid) இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
* வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அரை வால்நட் சாப்பிடலாம்.
3. பாதாம் பருப்பு
பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி (Antigen) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம். பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் புரோட்டின் அதிகமாகக் கிடைப்பதுடன் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக் கிடைக்கும்.
* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் சற்றே குறைவாகச் சாப்பிட வேண்டும்.நாள் ஒன்றுக்கு 3 - 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம்.
4. அத்திப்பழம்
அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சத்துகள் அதிகமாக உள்ளன. இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி, இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும்.
* அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு ஒரு அத்திப் பழம் சாப்பிடலாம்.
5. உலர் திராட்சை
இன்றைய சூழலில் பெரும்பாலானோரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதனைக் குறைத்து, தொடர்ந்து மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும் திறன் உலர் திராட்சைக்கு உண்டு. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் உலர் திராட்சைகளில், கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. மனிதர்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்(stress buster) அளவினையும், இரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவுக்கு குறைக்கும் உலர் திராட்சை, பலருக்கும் அடிக்கடி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் வராமலும் தடுக்கும். காய்ச்சல் சமயத்தில் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைத்து விரைவில் குணம் பெறலாம். குழந்தைகளுக்கு உலர் திராட்சையை ஜுஸ் செய்தும் கொடுக்கலாம்.
* சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உலர் திராட்சை சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 5 கிராம் உலர் திராட்சை சாப்பிடலாம்.
6. பிஸ்தா பருப்பு
பிஸ்தா பருப்பைச் சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து, உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.
* உடல் எடை பிரச்னை உள்ளவர்கள் பிஸ்தா பருப்பை மிகக் குறைவான அளவில் சாப்பிடலாம். இதில் கொழுப்புச்சத்து இருப்பதால், 65 வயதுக்கு அதிகமானோர் பிஸ்தா பருப்பைத் தவிர்ப்பது நலம். குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 3- 4 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடலாம்.
7. முந்திரிப் பருப்பு
முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
* விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம். 30 வயதுக்கு அதிகமானோர் வாரத்துக்கு ஒருமுறை 2 - 4 என்ற அளவில் சாப்பிடலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...