INDvsPAK: ஏமாற்றிய ஓப்பனர்கள்; ஹீரோவான திலக் வர்மா - அதிரடி வெற்றி
ஆசியகோப்பை 2025 இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இந்தத் தொடரில் நடக்கும் மூன்றாவது IND vs PAK போட்டி இது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி வெற்றி தாகத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இரண்டு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக்கொள்ளாமல் பிரிந்தனர்.
பிளேயிங் 11ல் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரின்கு சிங் களமிறங்கியதால் வழக்கத்துக்கு மாறாக முதல் ஓவரை ஆல் ரவுண்டனர் சிவம் துபே வீசினார்.
துபேவின் தேர்வு முதல் ஓவரிலேயே பலனைத் தந்தது. 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். எதிர்பாராத விதமாக இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் ஓவரில் பவுண்டரிகள் பறந்தன.
நல்ல தொடக்கம் இருந்தாலும், பும்ராவும் துபேவும் வீசிய முதல் நான்கு ஓவரில் விக்கெட் இழக்காமல் 32 ரன்களை சேர்த்தது பாகிஸ்தான். தாக்குதலை சுழற்பந்துக்கு மாற்றினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். 6 ஓவர் முடிவில் விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் 45 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் பேட்டர்கள் சஹிப்சதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் சமான் பிட்சில் உறுதியாக நின்றனர். ஒன்பது ஓவர் வரை குல்தீப் மற்றும் அக்சர் படேல் போராட, சீரான ரன் ரேட்டில் 77 ரன்கள் குவித்தது பாகிஸ்தான். சஹிப்சதா ஃபர்ஹான் அரை சதத்தை நிறைவு செய்திருந்தார்.

பத்தாவது ஒவரில் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி. அதுவரை சிறப்பாக ஆடிவந்த ஃபர்ஹான் திலக் வர்மா கையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
11 வது ஓவரில் சிவம் துபேவுக்கு எதிராக இரண்டு பவுண்டரிகள் அடித்து பாகிஸ்தானை நிமிர்த்தினார் புதிதாக வந்த பேட்ஸ்மேன் சயிம் ஆயுப். குல்தீப் வீசிய 13வது ஓவரில் அசத்தலாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் பும்ரா.
அடுத்தடுத்த ஓவர்களில் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் மெதுவான சுழற்பந்துகளில் அவுட்டாகி சென்றனர் பாகிஸ்தான் பேட்டர்கள். போட்டிக்குள் ஆக்டிவாக இருக்க சரியான நேரம் கிடைக்காமல் தடுமாறியது பாகிஸ்தான்.

குல்தீப் 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து133 ரன்கள் சேர்த்திருந்தது பாகிஸ்தான். குல்தீப் யாதவ் வீசிய 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ரன் குவிக்கும் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இரண்டு சிறப்பான கேட்ச்கள் பிடித்தார்.
பதினெட்டாவது ஓவரில் பந்துவீச்சாளரான ஹாரிஸ் ரவூஃபையும், கடைசி ஓவரில் ஆல்ரவுண்டர் முகது நவாஸையும் வீழ்த்தி பாகிஸ்தானை ஆல் அவுட் செய்தார் பும்ரா. ஹாரிஸ் ரவூஃப் விக்கெட்டை வீழ்த்தும்போது பும்ரா சர்ச்சைக்குரிய ஜெட் விமான சைகையை செய்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது . 19.1 ஓவர் முடிவில் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
20 - 3 சரியும் இந்திய அணி
147 என்ற இலக்கை எளிதானதாகவே எண்ணி களமிறங்கியது இந்திய அணி. வழக்கம் போல முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக ஆடப்போவதாக அறிவித்தார் அபிஷேக் சர்மா. ஆனால் பகீம் அஷ்ரப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹாரிஸ் ரவுஃப்பிடம் கேட்ச் அவுட் ஆனார்.

3வது ஓவர் வரை 5 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த கேப்டன் சூர்யகுமார் ஷாஹீன் அஃப்ரீடி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சல்மான் அலி அகா சிறப்பாக டைவ் அடித்து விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான ஃபீல்டிங்கை காட்டியிருக்கின்றனர்.
10 ரன்களுக்கு மேல் அடித்திருந்த ஒரே பேட்ஸ்மேனான சுப்மன் கில், அபிஷேக் சர்மா வழியில் 12 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். சஞ்சு சாம்சன் - திலக் வர்மா கூட்டணி இந்தியாவின் நம்பிக்கையை உயர்த்திப் பிடித்திருக்கின்றனர். சிறப்பான இரண்டு பவுண்டரிகள் மற்றும் திலக் வர்மாவின் சிக்ஸுக்குப் பிறகு 6 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது.

சீராக பவுண்டரிகளும் சிக்சர்களும் அடித்த வர்மா - சம்சன் கூட்டணி 12 ஓவர் முடிவில் 76 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் நேர்த்தியாக வலைவிரித்து ஸ்டம்புக்கு வெளியேபோட்ட பந்தில் சஞ்சு என்ற ஆபத்தான மீனைப் பிடித்தார். பாகிஸ்தானின் அழுத்தம் குறைந்தது.
சிவம் துபே - திலக் வர்மா கூட்டணி நிதனமாக ஆட்டத்தை எடுத்துச் செல்லத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃபை குறிவைத்து ரன்களைக் குவித்தார் திலக் வர்மா. 41 பந்துகளுக்கு 50-ஐ அடைந்தார். 4 விக்கெட் வீழ்ந்த சூழலில் உறுதியாக விளையாடிய அவருக்காக ஆர்பரித்தது அரங்கம்.
சிங்கில்களிலும் இரண்டுகளிலும் ரன்களைன் சிறுகசிறுக சேர்த்தது திலக் - துபே கூட்டணி. அவ்வப்போது சிக்சர் அடிக்கவும் தவறவில்லை. 19வது ஓவர் தொடக்கத்தில் சுமார் 6 நிமிடம் காலில் சிகிச்சைப் பெறுவதற்காக இடைவெளி எடுத்தார் ஹாரிஸ் ரவூஃப். இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்த துபே அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.

6 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் திலக் வர்மா. அடுத்த பந்திலேயே சிக்சர் விளாசி பாகிஸ்தான் ரசிகர்களை தலைமேல் துண்டுபோட வைத்தார். இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய ரின்கு சிங்குக்கு ஃபைனலை முடித்துவைக்கும் வாய்ப்பு கிடைக்க, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உரித்தாக்கினார்.
4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்து இன்றைய நாளின் ஹீரோவானார் திலக் வர்மா!
இரண்டு இன்னிங்ஸையும் சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான், சீராக ஆட்டத்தை எடுத்துச்செல்லத் தவறியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்காக காத்திருந்த பாகிஸ்தான் போட்டியை திலக் வர்மா ரகசியமாக திருடியதை கவனிக்கவில்லை.
வரவிருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதை அறிவித்து கோப்பையைத் தொடுகிறது இந்திய அணி!