துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
Kamal Haasan: "கடமையைச் செய்யச் செல்கிறேன்" - மாநிலங்களவை எம்.பி., ஆக பதவியேற்க டெல்லி சென்ற கமல்
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 24) டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உள்ள 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னிறுத்திய ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.

இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை (ஜூலை 25) பதவியேற்க இருக்கிறார். இதற்காக இன்று டெல்லி புறப்பட்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, "மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவும், என் பெயரைப் பதிவு செய்யவும் அங்குச் செல்கிறேன். இது இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மரியாதையும் கடமையும் ஆகும். பெருமையோடு கடமையைச் செய்ய டெல்லி செல்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.