2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலை...
Karnataka: புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் `பாலியல் அத்துமீறல்' - DSP கைது!
கர்நாடகாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ பரவவியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
58 வயதான ராமசந்திரப்பா துமகுரு மாவட்டம் மதுகிரியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று பெண் ஒருவர் அவரது அலுவலகத்துக்கு நில தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அந்த பெண் கூறியிருப்பதன்படி, அவரைத் தனி அறைக்கு அழைத்து தகாத முறையில், அனுமதியில்லாமல் தொட்டு அருவறுப்பாக நடந்து கொண்டுள்ளார் ராமசந்திரப்பா.
இந்த சம்பவத்தை தனியறையின் ஜன்னலுக்கு வெளியில் இருந்து ஒருவர் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும், காவல்துறை இதுபோன்ற விஷயங்களை சகித்துக்கொள்ளாது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மேலும் "நாங்கள் பாரதீய நியாய சஹிதா பிரிவு 68 (பாலியல் வல்லுறவு), 75 (பாலியல் துன்புறுத்தல்) 78 (ஸ்டால்கிங்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி-யை கைது செய்துள்ளோம். அவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளரால் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.