சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
Kumbh Mela: போக்குவரத்து நெரிசல்; கங்கையில் 275 கி.மீ படகில் பயணத்து கும்பமேளாவில் நீராடிய நண்பர்கள்
உத்தரப்பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிரயக்ராஜ் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு நகரங்களிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் வந்து கொண்டிருக்கின்றனர். கும்பமேளா இந்த மாத இறுதியில் முடிவடைய இருப்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேனி சங்கமத்தில் புனித நீராட வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே வாகனங்களை நிறுத்தவேண்டிய நிலை இருக்கிறது. பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே திரிவேனி சங்கமம் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டிய நிலை இருக்கிறது. கும்பமேளாவில் புனித நீராடும் மக்கள் காசி எனப்படும் வாரணாசிக்கும் செல்கின்றனர்.

இதனால் வாரணாசியிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது போன்ற போக்குவரத்து காரணங்களால் அதிகமானோர் கும்பமேளாவிற்கு வந்துவிட்டு திரிவேனி சங்கமத்தில் புனிதநீராட முடியாமல் திரும்பி செல்லும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுமந்த், சந்தீப் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் 5 பேர் என மொத்தம் 7 பேர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராட முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் கும்பமேளா நடைபெறும் இடத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்ஹாரியா என்ற இடத்தில் இருந்தனர்.
கும்பமேளாவில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருப்பது குறித்து அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இதனால் காரில் செல்வது சரியாக இருக்காது என்பதை உணர்ந்து படகு மூலம் கங்கை ஆற்றில் பயணம் செய்து கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர். சாலை மார்க்கமாக சென்றால் 170 கிலோமீட்டர் தூரம் இருந்தது. ஆனால் கங்கையில் பயணம் செய்தால் 275 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். ஏற்கெனவே அவர்களுக்கு படகு ஓட்டிய அனுபவம் இருந்ததால் அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் படகில் தங்களது பயணத்தை கடந்த 11ம் தேதி தொடங்கினர்.
இப்பயணம் குறித்து 7 பேரில் ஒருவரான மனு செளதரி கூறுகையில், ''நாங்கள் கும்பமேளா செல்வது என்று முடிவு செய்தவுடன் காரில் சென்றால் செல்ல முடியாது என்பதை அறிந்தோம். எனவே படகு மூலம் செல்வது என்று முடிவு செய்தோம். எனவே அதற்கு தக்கபடி முன்கூட்டியே செயல்பட்டு படகில் சிலிண்டர், அடுப்பு, 20 லிட்டர் பெட்ரோல், காய்கறிகள், அரிசி, கோதுமை மாவு போன்றவற்றை எடுத்துச் சென்றோம். படகு இன்ஜின் பழுதாகிவிட்டால் அதற்காக கூடுதலாக ஒரு இன்ஜினையும் எடுத்துச் சென்றிருந்தோம். இரவு, பகல் என நிற்காமல் பயணம் செய்தோம். இரண்டு பேர் படகு ஓட்டும்போது 5 பேர் ஓய்வு எடுத்தோம். எங்கள் அனைவருக்குமே படகு ஓட்டத்தெரியும். எனவே கூகுள் மேப் உதவியுடன் பிப்ரவரி 13ம் தேதி கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தோம்.
அங்கு நிம்மதியாக புனித நீராடிவிட்டு மீண்டும் அதே படகு மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம். மொத்தம் 84 மணி நேர படகு பயணத்தில் 550 கிலோமீட்டர் தூரத்திற்கு வந்து சென்றோம். பவர் பேங்க் எடுத்துச் செல்ல மறந்துவிட்டோம். மற்றப்படி பயணத்தில் எந்த வித பிரச்னையும் இல்லை'' என்று பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கும்பமேளா பல வித்தியாசமான மனிதர்களை சந்தித்தது. அதில் இவர்கள் ஒரு விதமாகும். கும்பமேளாவில் நேற்று வரை 52.96 கோடி பக்தர்கள் புனித நீராடியிருப்பதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. பக்தர்கள் அதிகரித்து வருவதால் கும்பமேளாவை மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.