கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? - மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!
கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷன்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன.
38 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு நாயகர்கள் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதேப்போல மணி ரத்னம் - ரஜினிகாந்த் இணையும் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது.

மணிரத்னம் கடந்த 1991-ம் ஆண்டு ரஜிகாந்த் - மம்மூட்டி நடிப்பில் தளபதி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டபோது, இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தானே பதிலளித்துள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
"ரசிகர் கூட்டத்தை மறுக்க முடியாது" - Mani Ratnam
சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்த மணிரத்னம், "அது (ரஜினிகாந்த் திரைப்படம்) நடக்குமா எனத் தெரியவில்லை. முதலில் எனக்கு அதற்கான ஸ்கிரிப்ட் வேண்டும், அவரது இன்றைய மார்க்கெட்டுக்கு ஏற்றதுபோல என்னால் எதாவது எழுத முடியுமா எனத் தெரியவில்லை. ஆண்டுகள் போகப்போக அவர் வளர்ந்துகொண்டேயிருக்கிறார்." எனப் பேசினார்.

மேலும் ஹீரோக்களின் நட்சத்திர அந்தஸ்த்து இயக்குநர்களின் சுதந்திரத்துக்கு தொந்தரவாக இருக்கிறதா என்பது குறித்து, "அது அந்த நட்சத்திரத்தைப் பொறுத்தது. அவர்கள் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதைக் கடந்த திரைப்படங்களை உருவாக்கவும் நடிக்கவும் விரும்புகிறார்களா என்பதைப் பொருத்தது. நிச்சயமாக ரசிகர் கூட்டத்தை மறுக்க முடியாது, ஆனால் அதுமட்டுமே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணையிட வேண்டுமா... என்பதை இயக்குநர்களும் நடிகர்களும் முடிவு செய்ய வேண்டும்.
ரசிகர்களுக்கு என்னத் தேவை என்பதை ஒப்புக்கொண்டு ஒன்று செய்தாலும், அதேநேரத்தில் அதிலிருந்து விலகி வேறுதிசையில் (வேறு டெம்ப்ளேட்டில்) செல்ல முடிந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்." எனக் கூறியுள்ளார்.

அடுத்த படம்?
மணிரத்னம் அடுத்ததாக என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. புதுமுக நடிகர்களை வைத்து இயக்குவதாக முன்னர் அறிவித்திருந்தார், நவீன் பாலிஷெட்டி நடிப்பில் தெலுங்கு காதல் திரைப்படம் இயக்குவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அடுத்தப்படம் குறித்து, "நான் இப்போது சில ஸ்கிரிப்ட்களில் பணியாற்றிவருகிறேன். ஆனால் எது சரியாக கூடிவரும் எனத் தெரியவில்லை. இன்று எனக்கு நம்பிக்கைத் தருவதாக இருக்கும் ஒன்று மறுநாள் காலையில் மறைந்துவிடுகிறது. இன்னும் எதையும் இறுதி செய்யவில்லை." எனக் கூறியுள்ளார்.