Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!
சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. உணவு காளான் மனிதனுக்கு உணவாக மட்டுமல்லாமல் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதச்சத்தும் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் இதில் இருக்கிறது. மேலும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாப்பிடக் கூடிய உணவு காளான். உணவாக மட்டுமல்லாமல் ரத்தத்திலுள்ள கொழுப்பை 24% சதவிகிதம் அளவுக்குக் குறைப்பதோடு நார்ச்சத்து, காளானில் அதிகமாக இருப்பதால் வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலுக்குச் சிறந்த மருந்தாகும்.
காளானின் சிறப்புகள்:
உணவாகப் பயன்படும் காளான்கள் குறித்து ஆய்வு செய்துவரும் நுண்ணுயிரியல்துறை பேராசிரியர் அருண் பிரசாத்திடம் பேசினோம்.
"காளானில் மனிதனுக்குத் தேவையான அனைத்து சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன. நமது அன்றாட உணவில் புரதச்சத்து இருப்பது மிகவும் அவசியமாகும். இச்சத்தினை தேவையான அளவு பெற அசைவ உணவை உட்கொள்கிறோம். ஆனால் இதன் விலையோ நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே குறைந்த செலவில் தேவையான அளவு புரதச்சத்தினை பெறக் காளான் உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
உணவுச் சத்துகளும், மருத்துவ குணங்களும்:
காளான் சிறந்த ஊட்டச்சத்து கொண்டது. நம் உடலுக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, தாதுச்சத்து போன்றவை இதில் அடங்கியுள்ளது. கேரட், தக்காளி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வாழைப்பழம், ஆப்பிள், பட்டாணி இவற்றைக் காட்டிலும், காளானில் கூடுதலாகப் புரதச்சத்து 2.90% உள்ளது. கொழுப்புச் சத்து 0.36%, மாவுச்சத்து 5.3% மற்ற உணவுப் பொருள்களைக் காட்டிலும் இதில் குறைவாகவே உள்ளது.
காளானில் கொழுப்பு, மாவுச்சத்து குறைவாக இருப்பதால், நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை வராமல் தடுக்கவும், குணமாக்கவும் காளான்களை உணவில் சேர்க்கலாம். மேலும் ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் காளான் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின்பி, சி மற்றும் டி தேவையான அளவு காணப்படுகின்றன. கால்சியம் 71.0%, பாஸ்பரஸ் 91.2% இரும்புச்சத்து 8.8% சோடியம் 10.6% பொட்டாசியம் 28.5% போன்ற தாதுக்கள் காளானில் இருப்பதால் பார்வைக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் பாதுகாப்பு கொடுக்க வல்லது.
பொதுவாகக் காளன்களைப் பறித்த உடனேயே சமையலுக்கு உபயோகிப்பது நல்லது. காளான்களைக் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி எடுத்து, உடனே குறைந்த நேரத்தில் வேகவைக்க வேண்டும். அதிக நேரம் வேகவிடுவதால் புரதம் மற்றும் உயிர்ச் சத்துகள் அழிந்து விடும். வேகவிடும்போது காளான்களுடன் சமையல் சோடாவைச் சேர்ப்பது நல்லதல்ல. சிறுதுண்டு இஞ்சி சேர்த்து வேக வைக்கலாம்" என்றார் அருண் பிரசாத்.
உணவு காளான்களின் ஊட்டச்சத்து பயன்கள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் பேசினோம்.
"உலகில் பலவகையான உண்ணத்தகுந்த காளான்கள் இருந்தாலும் நமக்குக் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே கிடைக்கின்றன. உணவுக்காகக் காளான்களை வாங்கும்போது அவை உண்ணத் தகுந்த காளான்கள்தான் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் காளான்களில் விஷத்தன்மை மிகுந்த சில வகைகளும் உள்ளன. பொதுவாக காளான்களில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே சிக்கன், மட்டன் போன்ற உணவுகள் சாப்பிடாதவர்களுக்கு சிறந்த மாற்றாக காளான் உணவுகள் இருக்கும். மேலும் இதில் அனைத்து வகையான மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன.
இதனைச் சமைப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படுவதில்லை. காளான்களைச் சமைக்க மூன்று நிமிடங்களே போதும். நன்றாகக் கழுவி சுத்தம் செய்த காளான்களைத் தீயில் லேசாக வதக்கிவிட்டு அதனைச் சோற்றுடனோ அல்லது இஞ்சி, பூண்டு, மஞ்சள் போன்ற மசாலா பொருள்கள் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். உணவு காளான்களை 2 வயதுக் குழந்தையில் தொடக்கி பெரியவர்கள்வரை அனைவரும் உண்ணலாம், இதனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்" என்றார் தாரிணி கிருஷ்ணன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...