Nehal Wadhera: 'ரிக்கி பாண்டிங் ஒரு வார்த்தை கூட நெகட்டிவாக பேசமாட்டார்'- கோச் பற்றி நெகிழும் வதேரா
'பஞ்சாப் வெற்றி!'
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் லக்னோவில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது

இந்தப் போட்டியில் பஞ்சாப் சார்பில் இம்பாக்ட் ப்ளேயராக வந்த நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி கவனத்தை ஈர்த்திருந்தார். போட்டிக்குப் பிறகு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருந்தார்.
நேஹல் வதேரா பேசுகையில், 'எங்களுக்கு இந்த வெற்றி தேவைப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட எல்லா வீரர்களுமே சிறப்பாக ஆடினார்கள். பௌலர்களும் சிறப்பாக வீசியிருந்தார்கள். எனக்கு பதற்றமாகவெல்லாம் இல்லை. ஆனால், நான் இந்தப் போட்டியில் ஆட வைக்கப்படுவேன் என சொல்லவே இல்லை. அதனால் ஒரே ஒரு செட் கிட்டை (Kit) மட்டும்தான் எடுத்து வந்திருந்தேன். ரொம்ப தாமதமாகத்தான் நான் ஆடப்போகிறேன் என்பதே தெரிந்தது.

ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பிரமாதமாக இருக்கிறது. ஆட்டத்தின் சூழலை உணர்ந்து உன்னுடைய இயல்பான ஆட்டத்தை சுதந்திரமாக ஆடு என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொஞ்சம் அனுபவமடைந்திருக்கிறேன். அந்த அனுபவத்தை பஞ்சாப் அணிக்காக வெளிக்காட்ட விரும்புகிறேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒரு வார்த்தையை கூட நெகட்டிவ்வாக பேசமாட்டார்.
நேர்மறையாக பேசி உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடுகளை ஒரு பயிற்சியாளர் அதிகம் பேசும்போது அது உங்களின் தன்னம்பிக்கையையே அதிகரித்துவிடும்.