பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 1500க்கும் மேற்பட்டோர் கைது!
Pahalgam Attack: "போதும்... பாகிஸ்தானுடன் கிரிக்கெட் வேண்டாம்" - RCB முன்னாள் வீரர் கோரிக்கை!
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் (Pahalgam) சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் சுமார் 28 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் இயங்கிவரும் லஸ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாத அமைப்பின் நிழல் தீவிரவாத அமைப்பான `தி ரெஸிஸ்டண்ட் ஃப்ரன்ட் (TRF)' இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "பாகிஸ்தானுக்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், ஆர்.சி.பி (RCB) அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி இந்த விஷயத்தில் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்து, இந்திய அணி இனி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, "இதனால்தான் சொல்கிறேன், பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட வேண்டாம். இப்போது இல்லை, எப்போதும் வேண்டாம். பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை அனுப்ப பி.சி.சி.ஐ அல்லது அரசு மறுத்தபோது, சிலர் 'அரசியலுக்கு அப்பாற்பட்டதாக விளையாட்டு இருக்கவேண்டும்' என்று கூறினர். அது உண்மையா? அப்பாவி இந்தியர்களைக் கொல்வது அவர்களின் தேசிய விளையாட்டாகத் தெரிகிறது. அவர்கள் அப்படித்தான் விளையாடுகிறார்களென்றால், அவர்களுக்குப் புரியும் மொழியில் நாம் பதிலளிக்க வேண்டிய நேரம் இது. ஆனால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகளால் அல்ல. உறுதியுடனும், கண்ணியத்துடனும் துளி சகிப்புத்தன்மையின்றி பதிலளிக்க வேண்டும்.
ENOUGH!!!! pic.twitter.com/1fF6XUhgng
— Shreevats goswami (@shreevats1) April 22, 2025
சில மாதங்களுக்கு முன்புதான், லெஜண்ட்ஸ் லீக்கிற்காக காஷ்மீரில் இருந்தேன். பஹல்காம் வழியாக நடந்தேன், உள்ளூர் மக்களைச் சந்தித்தேன், அவர்களின் கண்களுக்கு நம்பிக்கை திரும்புவதைக் கண்டேன். இறுதியாக அமைதி திரும்பியது போல் உணர்ந்தேன். இப்போது மீண்டும் இந்த இரத்தக்களரி. இது உங்களுக்குள் ஏதோவொன்றை உடைக்கிறது. மக்கள் இவ்வாறு இறக்கும்போது, இன்னும் எவ்வளவு காலத்துக்கு அமைதியாக இருப்பீர்கள் என்று கேள்வியெழுப்புகிறது. இதற்கு மேலும் கூடாது" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
2008 ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் அறிமுகமான ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, கடைசியாக 2021-ல் ஹைதராபாத் அணியில் ஆடியிருந்தார். இந்திய அணியில் தேர்வாகாத இவர், 2023-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.