Car Guide: புது கார் வாங்கப் போறீங்களா? 2025-ல் வரப்போகும் கார்கள் இதோ
QR Scam : `உஷார்...' - மாற்றப்பட்ட QR Code; குறிவைக்கப்பட்ட கடைக்காரர்கள்! - ம.பி-யில் என்ன நடந்தது?
டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. நகரத்தில் பெரும்பாலானவர்கள் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்துவருகின்றனர். அதே நேரம் அந்த டிஜிட்டல் மூலம் மோசடிகளும் அரங்கேறிவருவது தொடர்கதையாகிவிட்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் கஜுராஹேவாவில் ராஜேஷ் மெடிக்கல் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மருந்து வாங்கிய வாடிக்கையளர் ஒருவர், QR மூலம் பணம் செலுத்த முயன்றிருக்கிறார். அப்போது வழக்கமாக காண்பிக்கும் கடை உரிமையாளர் 'ஓம்வதி குப்தா'வின் பெயர் காண்பிக்கவில்லை.
அது தொடர்பாக அந்தக் கடைக்காரரிடம் தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் அவர் QR மோசடியாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபோன்று அந்தப் பகுதியில், பெட்ரோல் பங்க, மளிகை கடை என சுமார் 10 கடைகளுக்கு மேல் QR Code மாற்றி மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில், இரவில் சிலர் இந்த மோசடியில் ஈடுபட QR மாற்றி ஒட்டியது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கிரேவால் சைபர் மோசடிகள் குறித்த தரவுகளை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த முதல்வர் மோகன் யாதவ். ``2024-ம் ஆண்டில், 26 "டிஜிட்டல் கைது" மோசடி வழக்குகள் பதிவாகின, இதில் சைபர் குற்றவாளிகள் சட்ட அமலாக்க நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து ரூ.12.6 கோடிக்கு மேல் பணம் பறித்தனர். இது 2023-ம் ஆண்டை விட 130% அதிகரித்திருக்கிறது. 2024-ம் ஆண்டில் பணம் பறிக்கப்பட்ட ரூ.12.60 கோடியில், ரூ.72.38 லட்சம் (5.74%) மட்டுமே மீட்கப்பட்டது. 2023 - 2024-ம் ஆண்டுகளில், மத்தியப் பிரதேசத்தில் மக்கள் சைபர் மோசடியால் ரூ.150 கோடிக்கு மேல் இழந்திருக்கின்றனர்" என்றார்.