Salman Khan: ``என் வாழ்க்கை கடவுள் கையில்'' - லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்தான். இதனால் சல்மான் கானின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்றால் பாதுகாவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு செல்வது வழக்கம்.

சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதோடு சல்மான் கான் பண்ணை வீட்டிற்குச் செல்லும்போதும் கொலை செய்ய முயன்றனர்.
இப்போது நடிகர் சல்மான் கான் சிகந்தர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது சல்மான் கான் சிகந்தர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.
படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கானிடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''எனது வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எல்லாம் கடவுள், அல்லா பார்த்துக்கொள்வார். என்ன எழுதப்பட்டுள்ளதோ எழுதப்பட்டதுதான். அவ்வளவுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது குறித்து சல்மான் கான் அளித்த பேட்டியில், ''சில நேரங்களில் அதிகமானோர் நம்மை சுற்றி வருவது கூட பிரச்னையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
சல்மான் கான் ராஜஸ்தானிற்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். எனவே மான்களை வேட்டையாடிய காரணத்திற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
